/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறுதானிய உணவில் சத்து உட்கொண்டால் ஆரோக்கியம்
/
சிறுதானிய உணவில் சத்து உட்கொண்டால் ஆரோக்கியம்
ADDED : மார் 03, 2024 10:46 PM

ஊட்டி:'சிறுதானிய உணவுகளை உட்கொண்டு, மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஊட்டி சேரிங்கிராஸ் பூமாலை வணிக வளாகத்தில், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மதி சிறுதானிய உணவு அங்காடியை கலெக்டர் அருணா திறந்து வைத்து பேசியதாவது:
ஊட்டியில் 'வளரும் மங்கையர்' மகளிர் சுய உதவி குழு மூலம், சிறுதானிய உணவு அங்காடி அமைத்து திறக்கப்பட்டுள்ளது. இந்த அங்காடியில், பாரம்பரிய உணவான கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, தினை, வரகு மற்றும் குதிரை வாலி போன்ற சிறு தானியங்களை கொண்டு உணவு வகைகளை சமைத்து, பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த குழுவினர் சிறுதானிய உணவு தயாரிப்பில் சாதனை படைத்துள்ளனர். இந்த அங்காடி மூலம் கிடைக்கும் வருமானம், குழுவில் உள்ள, 12 உறுப்பினர்களின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இனிவரும் நாட்களில், கலெக்டர் அலுவலகம் அல்லது வேறு எந்த அரசு அலுவலகங்களில் அலுவலக கூட்டம் நடைபெற்றால், சிறுதானிய உணவு மட்டுமே அங்கு பரிமாற முன்வர வேண்டும் என்பது எனது விருப்பம்.
மக்கள் மறந்து போன நமது பண்டைய சிறுதானிய உணவு பொருட்களை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு, கலெக்டர் பேசினார்.
நீலகிரி எஸ்.பி., சவுந்திரராஜன், மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன், ஊட்டி நகர் மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் உள்ளிட்டர் பங்கேற்றனர்.

