/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டு யானைகளின் அசைவுகளை கவனியுங்க! கேரள வனத்துறையினர் விழிப்புணர்வு
/
காட்டு யானைகளின் அசைவுகளை கவனியுங்க! கேரள வனத்துறையினர் விழிப்புணர்வு
காட்டு யானைகளின் அசைவுகளை கவனியுங்க! கேரள வனத்துறையினர் விழிப்புணர்வு
காட்டு யானைகளின் அசைவுகளை கவனியுங்க! கேரள வனத்துறையினர் விழிப்புணர்வு
ADDED : மார் 05, 2024 11:14 PM

பாலக்காடு;கேரளாவில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கேரள மாநிலத்தில், சமீப காலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், வனத்துறை சார்பில், சமூக ஊடகங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வனத்துறை வெளியிட்ட விழிப்புணர்வு போஸ்டர்களில் கூறியிருப்பது:
குடியிருப்பு பகுதிக்குள் வரும் காட்டு யானைகள், அமைதியாக காதுகளை அசைத்தவாறு நின்று கொண்டிருந்தால் பயப்படத் தேவையில்லை. இது, யானைகள் அமைதியாக இருப்பதின் அறிகுறி. துதிக்கையை உயர்த்தி மோப்பம் பிடித்து கொண்டு நின்றால், சுற்று பகுதிகளை எச்சரிக்கையுடன் கண்காணிக்கிறது என அர்த்தம். இரண்டு காதுகளையும் அசைக்காமல், திறந்த நிலையில் இருந்தால், ஆபத்து கண்டறியப்பட்டதற்கான அறிகுறியாகும். வால் அசையாமல் இருந்தால், யானைகள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கும்.
துதிக்கை சுருட்டி, தலையை வளைத்து திருப்பினால், துரத்த தயாராகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால், அவற்றின் அசைவுகளை அறிந்து அதற்கேற்ப சுதாரித்து செயல்பட வேண்டும். ஒற்றை யானை, யானை கூட்டம் மற்றும் குட்டிகளுடன் கூட்டமாக வரும் போது, ஆகியவையின் நடத்தைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதம் பிடித்த யானையின் ஆவேசத்தை அறிந்து, அதன் அசைவுகளை கண்காணித்த பிறகே வனத்துறை நடவடிக்கை எடுக்கும். வனவிலங்குகளை கண்டால் பாதுகாப்பான இடத்துக்கு மக்கள் சென்று விட வேண்டும். வன பாதையில் வரும் மற்ற பயணியருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனத்தில் செல்வோர், வனவிலங்குகளிடம் சிக்கினால், வாகனத்தில் இருந்து வெளியே இறங்குவோ, ஹாரன் அடிக்கவோ, எஞ்சின் அணைக்கவோ கூடாது. உணவு வழங்கக் கூடாது. செல்பி எடுக்க முயல்வது தவறு. குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகளை கண்டால், அவற்றை விரட்ட கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும்.
வினவிலங்குகளை துன்புறுத்தும் வகையிலோ, அவற்றை சீண்டும் வகையில் நடந்து கொள்ள கூடாது. குடியிருப்பு பகுதி, ரோடுகளில் வனவிலங்குகளை கண்டால் 18004254733 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

