‘ஓம் காளி; ஜெய் காளி கோஷம் முழங்க விசர்ஜன ஊர்வலம்’
‘ஓம் காளி; ஜெய் காளி கோஷம் முழங்க விசர்ஜன ஊர்வலம்’
ADDED : செப் 16, 2026 06:52 PM
ஊட்டி: ஊட்டி, கோத்தகிரி, குன்னுார் பகுதிகளில், ஓம் காளி ;ஜெய் காளி கோஷம் முழங்க விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
நீலகிரி மாவட்ட முழுவதும், 550 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அதில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஊட்டியில் நேற்று ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் ரெக்ஸ் மணி, நிர்வாகி ஸ்ரீ சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், 82 சிலைகள் காலையில் காந்தளில் இருந்து, தாவரவியல் பூங்கா சாலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து, மாலையில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காமராஜர் அணையில் கரைக்கப்பட்டது.
* குன்னுாரில் அகில பாரத இந்து மகா சபா மற்றும் பொதுமக்கள் சார்பில் இந்து ஒற்றுமை திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் வீடுகள் மற்றும் கோவில்கள் என, 16 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நேற்று சுற்றுப்புற பகுதிகளில் இருந்து, விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து சென்று லாஸ் நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. நேற்று முன்தினமும், முசாபுரி, வீரகோம்பை உட்பட மற்ற இடங்களில் வைத்து வழிபட்ட சிலைகள் தனிதனியாக கரைக்கப்பட்டன.
* கோத்தகிரியில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் மற்றும் ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் துவங்கிய ஊர்வலம், ராம்சந்த் வழியாக, உயிலட்டி நீர் வீழ்ச்சிக்கு சென்ற போது, போலீசார் வழிமாறி செல்ல, நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர். அப்போது, திடீரென மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின், போலீசார் சமாதானப்படுத்தி, ஊர்வலத்தை தொடர வைத்தனர். தொடர்ந்து, 40க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. அதில், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசன், இந்து முன்னணி நிர்வாகி ஜகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்து முன்னணி சார்பில் நாளை, (18ம் தேதி) மாவட்டம் முழுவதும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. அதிலும், அதிகளவில் சிலைகள் கொண்டு வரப்படும் என்பதால், ஊர்வலம் நடத்துவதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்திலோ அல்லது ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கூடாது . விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, ஊர்வலத்தில் செல்லும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்லாமல் விதிகளை கடைபிடித்து செல்ல வேண்டும். போலீஸ் சார்பில் அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும். பிறமத வழிபாட்டு தலங்கள் அருகில் நிறுத்த கூடாது. அமைப்பாளர்களால் அடையாளம் காணப்பட்ட தொண்டர்கள் மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
