ADDED : செப் 14, 2026 08:52 PM
குன்னுார்: மேட்டுப்பாளையம்– குன்னுார் மலை பாதையில் ஸ்கூட்டர் தடுமாறி விழுந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரியில் சிக்கி, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர் பலியானார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் ஆழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹென்றி,64, ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர் பிரவீன்,46, என்பவருடன் நிலம் பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் மேட்டுப்பாளையம் சென்றிருந்தார். பின்னர் இருவரும் குன்னுார் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
பிரவீன் ஸ்கூட்டரை ஓட்ட, ஹென்றி பின்னால் அமர்ந்திருந்தார். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் மேட்டுப்பாளையம் -குன்னுார் மலை பாதையில், 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. அப்போது, பின்னால் அமர்ந்திருந்த ஹென்றி சாலையில் விழுந்தார்.
அதே நேரத்தில், சேலாஸ் பகுதிக்கு கற்களை ஏற்றிக்கொண்டு பின்னால் வந்த டிப்பர் லாரியில், ஹென்றி சிக்கி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். குன்னூர் போலீசார், ஹென்றியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கார்த்திக்,30, என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
