/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கேரட் விலை நாளுக்கு நாள் குறைவு; பயிரிட்ட சிறு விவசாயிகள் 'அப்செட்'
/
ஊட்டி கேரட் விலை நாளுக்கு நாள் குறைவு; பயிரிட்ட சிறு விவசாயிகள் 'அப்செட்'
ஊட்டி கேரட் விலை நாளுக்கு நாள் குறைவு; பயிரிட்ட சிறு விவசாயிகள் 'அப்செட்'
ஊட்டி கேரட் விலை நாளுக்கு நாள் குறைவு; பயிரிட்ட சிறு விவசாயிகள் 'அப்செட்'
ADDED : ஏப் 21, 2025 08:34 PM
ஊட்டி; ஊட்டி கேரட் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பல ஏக்கரில் கேரட் விவசாயம் செய்து வரும், சிறு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கேரட் விவசாயம் கடைபோகம், கார் போகம், நீர் போகம் உள்ளிட்ட பருவங்களில் நடந்து வருகிறது.
கேரட் வரத்து அதிகரிக்கும் சமயங்களில் விலை குறைவது வழக்கம். ஆனால், கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக வரத்து அதிகரித்தாலும், குறைந்தாலும் சராசரியாக கிலோவுக்கு, 50 ரூபாய்க்கு குறையாமல் விலை கிடைத்து வந்தது. அதிகபட்சம் கிலோவுக்கு, 100 ரூபாய் வரை விலை கிடைத்துள்ளது.
வெளி மாவட்ட வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளின் தோட்டங்களுக்கு சென்று மொத்தமாக கொள்முதல் செய்தனர்.
இந்நிலையில், நடப்பாண்டின் முதல் போக விவசாயத்தில் விற்பனைக்கு வந்த கேரட்க்கு எதிர்பார்த்த விலை கிடைக்காததால் செலவினங்களை தாக்கு பிடிக்காத விவசாயிகள் அறுவடை செய்வதை தவிர்த்தனர்.
கிலோ ரூ. 20 க்கு விற்பனை
தற்போது , கிலோவுக்கு, 20 ரூபாய் கிடைத்து வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். ஊட்டி அருகே, எம். பாலாடா சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கரில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் நல்ல விலை கிடைக்க விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
மார்க்கெட் வியாபாரி சங்க செயலாளர் ராஜா முகமது கூறுகையில்,''பிற மாவட்டங்களில் இருந்து கேரட் ஊட்டிக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விலை குறைந்து அதிகபட்சம் கிலோவுக்கு 20 ரூபாய் கிடைத்து வருகிறது. கேரட் உட்பட அனைத்து காய்கறிகளுக்கும் விலை குறைந்து உள்ளது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாநில, மாவட்ட காய்கறி வரத்து குறைந்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.
விவசாயி ராமன் கூறுகையில்,''மலை காய்கறி விலை குறைந்து வருவது குறித்து தோட்டக்கலை துறையினர் விரிவான ஆய்வு நடத்தி, உள்ளூர் விவசாயிகள் பாதிக்காத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.