/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி கேரட் விலை ஒரே நாளில் திடீர் உயர்வு
/
ஊட்டி கேரட் விலை ஒரே நாளில் திடீர் உயர்வு
ADDED : நவ 01, 2024 09:57 PM
குன்னுார்; நீலகிரியில் விளையும் ஊட்டி கேரட்டிற்கு விலை உயர்ந்து கிலோவிற்கு, 120 ரூபாய் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குன்னுார், ஊட்டி, கோத்தகிரி, மஞ்சூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரட் விலை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். தீபாவளி தினத்திலும் கேரட் கிலோ, 35 ரூபாய் வரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒரே நாளில் கேரட் விலை உயர்ந்து, அதிகபட்சமாக, 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. குறைந்தபட்சம் சில ரகங்கள், 70 முதல் 100 ரூபாய் வரையிலும் விற்பனையானது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேத்தி மலை காய்கறி மொத்த வணிகர் ஹரிஹரன் கூறுகையில், ''தீபாவளி விடுமுறையையொட்டி தொழிலாளர்கள் இல்லாததால், கேரட் அறுவடை குறைந்தது.
இதனால், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் அறுவடை செய்யப்பட்ட கேரட்டுக்கு மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் அதிக விலை கிடைத்துள்ளது,'' என்றார்.