/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி எமரால்டு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு! அணைநீரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க நடவடிக்கை
/
ஊட்டி எமரால்டு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு! அணைநீரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க நடவடிக்கை
ஊட்டி எமரால்டு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு! அணைநீரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க நடவடிக்கை
ஊட்டி எமரால்டு பகுதியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு! அணைநீரால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க நடவடிக்கை
ADDED : நவ 17, 2024 10:10 PM

ஊட்டி ; எமரால்டு பகுதியில் அணைநீரால், கூட்டு குடிநீர் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் வகையில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
ஊட்டி அருகே காட்டு குப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில், குந்தா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2022ம் ஆண்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை, 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இன்னும் இந்த பணிகள் முடிய ஓராண்டு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், காட்டு குப்பை பகுதியில் நடந்து வரும் நீர் மின் உற்பத்தி நிலைய பணிகளுக்காக, எமரால்டு அணையில் உள்ள நீரை வெளியேற்ற மின்வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த, 10ம் தேதி முதல் எமரால்டு அணை திறக்கப்பட்டு, வினாடிக்கு,1000 கன அடி நீர் வெளியேறி வருகிறது. 30 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
அதிகாரிகள் நேரில் ஆய்வு
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட முதல் நாளில் எமரால்டு நகரில் உள்ள கோவில், மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையும், தண்ணீரில் பாதி அளவு மூழ்கியது. எமரால்டு அணையின் கரையோரம் எம்.எல்.ஏ., நிதியின் மூலம், 8.50 லட்சம் ரூபாயில் முள்ளிகூர் ஊராட்சி சார்பில் கட்டப்பட்டு வந்த விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான அறை இடிந்து சேதமானது.
மேலும், தண்ணீரின் வேகம் தாங்காமல் மண்ணரிப்பு ஏற்பட்டு எமரால்டு பஜார் பகுதியில் உள்ள எமரால்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம் அடைந்துள்ளது.
இதை தொடர்ந்து, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் செல்வகுமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் சங்கீதா, சித்ரா தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
எமரால்டு அணையில் இருந்து தண்ணீரை நிறுத்தி உடனடியாக குடிநீர் குழாய்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை உடனடியாக சரி செய்யாவிட்டால், குன்னுார் உட்பட முக்கிய இடங்களுக்கு குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
குந்தா அணை திறப்பு
எமரால்டு அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பிக்குலி, தங்காடு தோட்டம் நீரோடை வழியாக, குந்தா அணையை சென்றடைகிறது. ஏற்கனவே, குந்தா அணையில், 89 அடிக்கு 86 அடிவரை தண்ணீர் இருப்பில் உள்ளது.
அதே வேளையில் பாதி அளவுக்கு சகதி நிறைந்துள்ளது. தண்ணீரை தேக்கி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை அடுத்து நேற்று குந்தா அணையில் இருந்து இரண்டு மதகுகளில், வினாடிக்கு, 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீரோடையிலிருந்து செல்லும் நீர் பில்லுார் அணையை சென்றடையும்.