/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி என்.சி.எம்.எஸ்., புதிய கடைகளால் பெரும் நஷ்டம்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
/
ஊட்டி என்.சி.எம்.எஸ்., புதிய கடைகளால் பெரும் நஷ்டம்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
ஊட்டி என்.சி.எம்.எஸ்., புதிய கடைகளால் பெரும் நஷ்டம்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
ஊட்டி என்.சி.எம்.எஸ்., புதிய கடைகளால் பெரும் நஷ்டம்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்
ADDED : செப் 18, 2024 08:56 PM

ஊட்டி : ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கடைகளை ஏலம் விடுவதில் தொடர்ந்த குழப்பத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; விரைவில் இ-டெண்டர் முறையில் ஏலம்விட கூட்டுறவுதுறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டி, என்.சி.எம்.எஸ்., கூட்டுறவு நிறுவனம் வளாகத்தில் பார்க்கிங் தள நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான வியாபாரிகள் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
கடந்த, 2017ம் ஆண்டில் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டு, அங்கு பார்க்கிங் தளம் மற்றும், 30 புதிய கடைகள், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.
அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் கடை ஒதுக்கீடு தொடர்பாக, சில ஆளும் கட்சியினருக்கு பெரும் தொகை கைமாறியதால் சர்ச்சை எழுந்தது. இதனால், குழப்பம் ஏற்பட்டு முறையாக டெண்டர் விட முடியாமல் காலம் தாழ்த்தப்பட்டது. பார்க்கிங் தளம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், ஏழு ஆண்டுகளாக புதிய கடைகள் ஏலம் விடப்படவில்லை.
கமிட்டி அமைத்து தீர்வு
மறுபுறம், அங்கு கட்டப்பட்ட கடைகள் பல ஆண்டுகள் ஆன நிலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து, இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
என்.சி.எம்.எஸ்., நிறுவனத்திற்கும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு காண, நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் உத்தரவின் பேரில், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துகுமார் தலைமையில், 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துகுமார் கூறுகையில், '' என்.சி.எம்.எஸ்., வளாகத்தில், 30 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக டெண்டர் விட்டு கடைகள் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, எனது தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் முடிவு படி, மின் இணைப்பு பெற மின்வாரியத்திற்கு விண்ணப்பித்து அதற்காக தொகையை செலுத்தியுள்ளோம்.
மின் இணைப்பு வாங்கியதும் கட்டடத்திற்கு வர்ணம் பூசி பொலிவுப்படுத்தப்படும். பின், இ - டெண்டர் மூலம் கடைகள் ஒதுக்கப்படுகிறது.
இதில், 1 முதல் 12 கடைகள் கூட்டுறவு, ஆவின், டான்டீ உள்ளிட்ட அரசு துறைக்கு ஒதுக்கப்படுகிறது. பிற கடைகள் இ - டெண்டர் மூலம் ஏலம் எடுப்பவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.