ஊட்டியின் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக அதிகரிப்பு
ஊட்டியின் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாக அதிகரிப்பு
ADDED : ஏப் 15, 2026 04:01 AM

ஊட்டி: ஊட்டியில், 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதால், குளிர்ச்சியை தேடி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
ஊட்டியில் கடந்த மூன்று நாட்களாக, அதிகபட்ச வெப்பநிலை, 26 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுவதால், குளிர்ச்சியை தேடி ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இரவில் மட்டும், 14 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது.
கோடை மழை பெய்யாமல் இருந்தால் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகமாகி உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், பல இடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அவதிப்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், சுற்றுலா மையங்களில், கோடை சீசனுக்கு தயாரான பல லட்சம் மலர்கள் வாடி விடும் அபாயமும் உள்ளது.
சமூக ஆர்வலர் முனைவர் ராஜன் கூறுகையில்,'' கடந்த, 2024ம் ஆண்டுக்கு பின், தற்போது, 29 டிகிரி செல்சியஸ் அளவுக்கு, கடும் வெப்பமான காலநிலை மாவட்டம் முழுவதும் நிலவுகிறது.
கட்டட காடுகள் அதிகரிப்பு, பல்லாயிரம் வாகனங்கள் வருவதால், சுற்றுச்சூழலில் கார்பன் அளவு அதிகரித்து ஏற்படும் பாதிப்பு; கடந்த இரு ஆண்டுகளாக குறைந்து வரும் கோடைமழை முக்கிய காரணிகளாக கூறமுடியும். மேலும், 'எல் நினோ'வின் தாக்கமும் இருக்கலாம்,'' என்றார்.
'எல் நினோ' என்றால் என்ன...?
பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில், கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை, வழக்கத்திற்கு மாறாக, சராசரியை விட அதிகமாக உயரும் ஒரு இயற்கை காலநிலை நிகழ்வாகும். இது பொதுவாக ஒவ்வொரு, 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, 9 முதல், 12 மாதங்கள் வரை நீடிக்கும். இந்த நிகழ்வால் தான், கோடையில் இயல்பாக உள்ள வெப்பநிலையின் அளவை விட நடப்பாண்டு, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உலகளவில் வெப்பநிலை அதிகரிக்க கூடும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
