UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 07:07 PM

பாலக்காடு: சமையல் எண்ணெய்யை திரும்ப திரும்ப பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்புத் துறையினர் ‘ஆபரேஷன் தெளிமா’ என்ற பெயரில், பாலக்காடு மாவட்டத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
பாலக்காட்டில் மாலை நேரங்களில் செயல்படும் தள்ளுவண்டி கடைகள், சாலையோர உணவகங்கள் மற்றும் பலகார கடைகளை இலக்காக கொண்டு, இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பாலக்காடு நகராட்சி பகுதியில், 179 கடைகளில் நடமாடும் ஆய்வகத்தின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
‘டி.பி.சி.’ என்ற மின்னணு கருவி வாயிலாக சமையல் எண்ணெய் தரம் பரிசோதிக்கப்பட்டதில், மறுபயன்பாட்டிற்குத் தகுதியற்ற, 35 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும், விதிமுறைகளை மீறிய, 25 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு உதவி ஆணையர் ரேகா தெரிவித்தார்.
பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்கில், இதுபோன்ற திடீர் சோதனைகள் வரும் நாட்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்படும், என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
