/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி மாவட்டத்தை புறக்கணித்த விவசாய 'பட்ஜெட்' ஊட்டிக்கு முதல்வர் வரும் போது தெரிவிப்பதாக கருத்து
/
நீலகிரி மாவட்டத்தை புறக்கணித்த விவசாய 'பட்ஜெட்' ஊட்டிக்கு முதல்வர் வரும் போது தெரிவிப்பதாக கருத்து
நீலகிரி மாவட்டத்தை புறக்கணித்த விவசாய 'பட்ஜெட்' ஊட்டிக்கு முதல்வர் வரும் போது தெரிவிப்பதாக கருத்து
நீலகிரி மாவட்டத்தை புறக்கணித்த விவசாய 'பட்ஜெட்' ஊட்டிக்கு முதல்வர் வரும் போது தெரிவிப்பதாக கருத்து
ADDED : மார் 21, 2025 02:53 AM

குன்னுார்: 'நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வரும் விதமாக, மாநில விவசாய பட்ஜெட் அமைந்துள்ளது,' என, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விளங்கும் தேயிலை தொழிலை நம்பி, 65 ஆயிரம் விவசாயிகள், பல தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விளை பொருட்களில், 74 சதவீதம் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
ஏற்கனவே பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட, மாநில அரசின் விவசாய பட்ஜெட்டில் தேயிலை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'தேயிலை பண பயிர் பட்டியலில் இருந்தாலும், மலை மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், சிறப்பு அடிப்படையில், மாநில அரசும் விவசாய பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.
சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்காக தனியாக விவசாய பட்ஜெட் அறிவிக்கும் நிலையில், மலை மாவட்ட தேயிலைக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. பட்ஜெட்டிற்கு முந்தைய கூட்டங்களில், தேயிலை விவசாய பிரதிநிதிகள் உள்ளடக்கியவர்களின், கருத்து கேட்டு கூட்டம் நடத்தி, கோரிக்கைகள் பதிவு செய்தார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேயிலை விவசாயிகளை புறக்கணித்துள்ளது கவலையை அளிக்கிறது. பணப்பயிர் பட்டியலில் இருந்த போதும், 1980ம் ஆண்டு முதல் பல ஆண்டுகள் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
குந்தா மேற்குநாடு தேயிலை விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறியதாவது:
2012ல் இருந்து, நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுடன் கூடிய ஆதார விலையை வழங்க வேண்டும் என்ற கோர்ட் உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது. நீலகிரியில் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்யும் விலையை கூட பல கூட்டுறவு தொழிற்சாலைகள் முறையாக வழங்குவதில்லை.
'பசுந்தேயிலைக்கு, 30 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்படும்,' என, தேர்தல் நேரத்தில், ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 2022ல் தோட்டக்கலை நடத்திய ஆய்வில், ஒரு கிலோ பசுந்தேயிலை உற்பத்தி செலவு, 22.30 ரூபாய் என கணக்கிடப்பட்டது. தற்போது, 25 ரூபாய் வரை உற்பத்தி செலவாகிறது. இந்த நேரத்தில் நீலகிரி விவசாயிகளின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல், ஏமாற்றம் அளிக்கும் விவசாய பட்ஜெட்டாக இது உள்ளது.
சிறு,குறு தேயிலை விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியன்:
நீலகிரி மாவட்டத்தில், தேயிலை உற்பத்தியில், 65 ஆயிரம் சிறு விவசாயிகள் உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் நல்ல அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எந்த அறிவிப்பும் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
குறிப்பாக, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, அரசு வழங்க வேண்டிய, 1.40 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டது. இவற்றை வழங்குவதாக கூறியும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
ஊட்டிக்கு அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் வரும்போது, தேயிலை பிரச்னைகள் குறித்து நிச்சயமாக வலியுறுத்தப்படும்.