/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொது இடங்களில் 'பிளாஸ்டிக்' சேகரிப்புக்கு உத்தரவு
/
பொது இடங்களில் 'பிளாஸ்டிக்' சேகரிப்புக்கு உத்தரவு
ADDED : ஜன 20, 2025 10:34 PM
ஊட்டி; மாவட்டத்தின் பொது இடங்களில் 'பிளாஸ்டிக்' சேகரிப்பை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 2019ம் ஆண்டு வெளியான ஐகோர்ட் தீர்ப்பின்படி,'பிளாஸ்டிக்' குடிநீர் பாட்டில்கள்; பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் உள்ளிட்ட, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வருபவர்கள் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறைத்து கொண்டு வருவது அதிகரித்து இருப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாலையோரங்களில் வாகனங்களின் நிறுத்தி பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசி எறிவதால் வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மாவட்ட நிர்வாகத்தால் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் சேகரிப்பு செயல்படுத்த உத்தரவு
தற்போது, பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு , பொது இடங்களில் சுத்தம் செய்தல் உட்பட பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி , சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், 'எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''நீலகிரியில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடந்து வருகின்றன.
நீர் நிலைகள், குடியிருப்பு பகுதிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் சேகரிப்பு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சித் துறைகளும் நீர் நிலைகளை அறிந்து அவற்றை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.