/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணைகளில் நீர் உள்ளதால் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவு! இரண்டாம் சீசனில் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏற்பாடு
/
அணைகளில் நீர் உள்ளதால் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவு! இரண்டாம் சீசனில் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏற்பாடு
அணைகளில் நீர் உள்ளதால் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவு! இரண்டாம் சீசனில் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏற்பாடு
அணைகளில் நீர் உள்ளதால் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்த உத்தரவு! இரண்டாம் சீசனில் தட்டுப்பாட்டை தவிர்க்க ஏற்பாடு
ADDED : ஆக 03, 2025 08:43 PM

ஊட்டி; தென் மேற்கு பருவ மழையால் அணை, தடுப்பணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பு உள்ளதால், இரண்டாம் சீசன் மற்றும் கிராமங்களில் குடிநீர் வினியோகம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 5 நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகளின் கீழ், 2.50 லட்சம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் குடிநீர் தேவையை, 220 தடுப்பணைகள், மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள, 13 அணைகள் உட்பட 15 அணைகள் பூர்த்தி செய்து வருகின்றன.
பிற மாவட்டங்களும் பயன் அந்தந்த பகுதிகளின் நீராதாரத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பெரும்பாலான வார்டுகளுக்கு அப்பர்பவானி, பில்லுார் அணைகள் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
அதேபோல், எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குன்னுார் நகராட்சி, பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், ராணுவ மையம் மற்றும் இத்தலார், முள்ளிகூர், நஞ்சநாடு உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பைக்காரா கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக சோலுார் பேரூராட்சி வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. ஊட்டி நகராட்சிக்கு பார்சன்ஸ்வேலி, குன்னுார் நகராட்சிக்கு ரேலியா அணை முக்கிய நீராதாரமாக உள்ளது.
அதிகாரிகள் கள ஆய்வு இந்நிலையில், நடப்பாண்டு, தென் மேற்கு பருவமழை முன் கூட்டியே துவங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள அணைகள், தடுப்பணைகளில் முழு கொள்ளளவில் நீர் ததும்பி காணப்படுகிறது.
இதனால், 'அடுத்த மாதம் துவங்கும், இரண்டாம் சீசன், நவ., மாதம் துவங்கும் வடகிழக்கு பருவமழை வரை, உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் பிரச்னை வர கூடாது,' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து, 'அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் தடுப்பணைகளின் தண்ணீர் இருப்பு, குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலப்பது, பராமரிப்பு உள்ளிட்டவைகளை கள ஆய்வு நடத்தி, அறிக்கை தர வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறுகையில்,'நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததில் நீராதாரங்களின் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. செப்., மாதம் இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட கூடாதென மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மாவட்டத்தில், கிராமங்களில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் இருப்பில் இருப்பதால், குடிநீர் வினியோகம் சீராக இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

