ADDED : மார் 05, 2026 05:09 AM
கோத்தகிரி: கோத்தகிரி கப்பட்டி கிராம விவசாயிகளுக்கு, தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் (எஸ்.எச்.டி.எஸ்) சார்பில், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், காய்கறி மற்றும் பழம் சாகுபடிக்கான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி வட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் பழம் சாகுபடி அங்கக வேளாண்மை பயிற்சி படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கப்பட்டி கிராமத்தில் பயிற்சி முகாமிற்கு கிராம தலைவர் போஜன் தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் பரத்குமார் திட்டங்கள் குறித்து பேசினார். மண் பரிசோதனை நிலையத்தை சேர்ந்த தோட்டக்கலை அலுவல் முனைவர் அனிதா மண்வளம் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை துறை, வேளாண் ஆராய்ச்சி நிலையம் மற்றும் பயிர் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள், அந்தந்த துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, பயிற்சியின் நோக்கம் குறித்து தெரிந்து பயன் அடைந்தனர்.
