'ஆர்கானிக் ஒயிட் டீ'க்கு மவுசு; ஒரு கிலோ ரூ.15 ஆயிரம்
'ஆர்கானிக் ஒயிட் டீ'க்கு மவுசு; ஒரு கிலோ ரூ.15 ஆயிரம்
ADDED : மார் 30, 2025 05:55 AM

குன்னூர் : இயற்கை முறையிலான ஆர்கானிக் சில்வர் டிப் எனும் ஒயிட் டீ, ஒரு கிலோ 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், தேயிலை வாரியம் சார்பில், தென்மாநில தேயிலை மகத்துவம் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வர்த்தக கண்காட்சியில், பல்வேறு தேயிலை தூள்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன.
இதில், கோத்தகிரி பேரகனியை சேர்ந்த ஆர்கானிக் தேயிலை விவசாயி விமலா, ஆர்கானிக் முறையிலான, சிறப்பு தேயிலை துாள்களில், ஒயிட் டீ, கிரீன் டீ, உலாங் டீ ஆகிய சிறப்பு தேயிலை தூள்களை காட்சிப்படுத்தினார்.
விமலா கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக 3 ஏக்கரில் ஆர்கானிக் முறையிலான காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்து விளங்கும் தேயிலை தூள்களில், ஒயிட் டீ, கிரீன் டீ, உலாங் டீ, உட்பட சிறப்பு தேயிலை தூள்கள் சர்வதேச அளவில் சிறப்பு பெற்றுள்ளது. சில்வர் டிப் எனும் மொட்டு நுனி இலையை, ஒரு தொழிலாளர், ஒரு ஏக்கரில் 100 கிராம் சேகரிப்பார். இது போன்று 5 கிலோ சேகரிக்கும் நுனி இலையில், ஒரு கிலோ ஒயிட் டீ தயாரிக்கப்படுகிறது; கிலோ 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் கொண்டதும், உடலுக்கு பல நன்மைகளை தரும் சில்வர் டிப் எனும் ஒயிட் டீயை துபாய் உட்பட வெளிநாடுகளில் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். உயர் ரத்த அழுத்தம் குறைப்பு மற்றும் இதய நோய்க்கு மருந்தாகவும் இவை விளங்குகிறது,'' என்றார்.
