/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஒத்தமரம் காலனி; நான்கு குடும்பங்கள் நிவாரண முகாமில் தங்க வைப்பு

ADDED : டிச 03, 2024 08:45 PM

ஊட்டி; ஒத்த மரம் பகுதியில் நான்கு குடும்பங்கள் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட நொண்டி மேடு அருகே, ஒத்தமரம் காலனி பகுதியில், 45 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். சாலை, நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி, அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஊட்டியில் பெய்த கனமழைக்கு மண் சாலை சேறும், சகதியாக மாறியது. கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்பு வாசிகளின் பெரும்பாலான குடியிருப்புகள் தரமில்லாமல் உள்ளன.
இந்நிலையில், அப்பகுதியில் பெய்த கனமழையில், குடியிருப்பு இடிந்து கூலி தொழிலாளி ஆறுமுகம் என்பவர் கட்டட இடிப்பாட்டில் சிக்கி உயிரிழந்தார். தீயணைப்பு துறையினர் கடும் சிரமத்திற்கு இடையே உடலை மீட்டனர். ஆனால், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டுவர சாலை வசதி இல்லாததால், குறிப்பிட்ட பகுதி வரை ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை.
அப்பகுதி மக்கள் ஒரு கி.மீ., துாரம் உடலை சுமந்து கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் கூறுகையில்,'நகராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியை ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்,' என்றனர்.
ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ் கூறுகையில், ''ஒத்த மரம் பகுதியில், 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதில், 10 வீடு மண்ணால் கட்டப்பட்டுள்ளன. 4 வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
அங்கு குடியிருந்தவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நொண்டி மேடு பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைத்துள்ளோம். அங்கு ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.