/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓவேலி யானை நள்ளிரவில் கராலில் அடைப்பு சில வாரங்கள் சிறை வைக்க முடிவு
/
ஓவேலி யானை நள்ளிரவில் கராலில் அடைப்பு சில வாரங்கள் சிறை வைக்க முடிவு
ஓவேலி யானை நள்ளிரவில் கராலில் அடைப்பு சில வாரங்கள் சிறை வைக்க முடிவு
ஓவேலி யானை நள்ளிரவில் கராலில் அடைப்பு சில வாரங்கள் சிறை வைக்க முடிவு
ADDED : செப் 24, 2025 11:38 PM
கூடலுார்: கூடலுார் ஓவேலியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட, காட்டு யானை ராதாகிருஷ்ணன், முதுமலை யானைகள் முகாமில் உள்ள கராலில் அடைக்கப்பட்டது; சில வாரங்கள் சிறையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடலுார் ஓவேலி பகுதியில், 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை தாக்கி, 12 பேர் உயிரிழந்தனர். மக்கள் நடத்திய போராட் டங்களை தொடர்ந்து,அதனை பிடிக்கும் பணி, 16ம் தேதி துவங்கப்பட்டது. நேற்று முன்தினம், ஓவேலி எல்லைமலை பகுதியில் முகாமிட்ட யானையை, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், 140 வன ஊழியர்கள், பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மேகமலை புலிகள் காப்பகம் கால்நடை டாக்டர் கலைவாணன் ஆகியோர், யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். எனினும், யானையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து, கும்கி யானைகள் உதவியுடன், 2:30 மணிக்கு கால்நடை டாக்டர்கள் மேலும், ஒரு மயக்க ஊசி செலுத்தினர்.
இழுத்து வந்த கும்கிகள் தொடர்ந்து, முதுமலை கும்கி யானைகள் வசீம், விஜய், பொம்மன், சீனிவாசன் உதவியுடன் யானைப்பாகன்கள், வன ஊழியர்கள் காட்டு யானையை இழுத்து வந்து, இரவில் லாரியில் ஏற்றி, முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
கூடுதல் தலைமை முதன்மை வன பாதுகாவலர் வேணுபிரசாத், முதுமலை கள இயக்குனர் கிருபா ஷங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, முதுமலை துணை இயக்குனர் கணேசன் முன்னிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, காட்டு யானையை கராலில் அடைத்தனர்.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''ஓவேலி பகுதியில் முதன் முறையாக காட்டு யானை, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டது. யானை பிடிக்கும் பணி துவங்கியது முதல், லாரியில் ஏற்றி, முதுமலைக்கு செல்லும் வரை வன ஊழியர்கள், முழு பங்களிப்பு அளித்தனர். கராலில் அடைக்கப்பட்ட யானை, வனப்பகுதியில் விடுவது குறித்து, சில வாரங்களுக்கு பின்னர் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
முதுமலை துணை இயக்குனர் கணேசன் கூறுகையில், '' கும்கி யானைகள் உதவியுடன், காட்டுயானை நள்ளிரவு பாதுகாப்பாக கராலில் அடைக்கப்பட்டது. அதனை சாந்தப்படுத்தும் பணியில் பாகன்கள் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.