/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கவிழ்ந்த லாரி; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
/
கவிழ்ந்த லாரி; இரு மாநில போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 25, 2025 08:28 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே ஏற்பட்ட லாரி விபத்தால் இரு மாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பகுதியில் இருந்து, பந்தலுார் அருகே, அத்திக்குன்னா தனியார் தேயிலை தொழிற்சாலைக்கு எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது.
நள்ளிரவு, 12:00 மணிக்கு, பந்தலுார் பொன்னானி அருகே வளைவான சாலை பகுதியில் வந்தபோது நிலை தடுமாறிய லாரி, சாலை ஓரத்தில் கவிழ்ந்தது.
மைசூரு பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் நாகேந்திரன் 24, கிளீனர் ரவி, 23, காயங்கள் இன்றி உயிர்தப்பினர். தொடர்ந்து, லாரியில் இருந்த எரிபொருள் நிரப்பிய மூட்டைகள் வேறு லாரியில் ஏற்றப்பட்டன.
சாலையில் லாரி கவிழ்ந்ததால், கூடலுாரில் இருந்து மாநில எல்லையான பாட்டவயல், அய்யன்கொல்லி, கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் கேரளா மாநிலம் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. விபத்தடைந்த லாரியை அகற்றிய பின் போக்குவரத்து சீரானது.
மக்கள் கூறுகையில், 'வளைவு மற்றும் தாழ்வான பகுதியை கொண்ட இந்த சாலையில், அடிக்கடி கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலை துறை மூலம் சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வாகன ஓட்டுனர்கள், தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் செவிமடுக்க மறுப்பதால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது,' என்றனர். எனவே, தொடரும் விபத்துக்களை தவிர்க்க சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.