ADDED : ஆக 24, 2026 05:31 PM
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே கோட்டத்தை பிரிக்கும் நடவடிக்கை கண்டித்து, நேற்று மா.கம்யூ. கட்சியின் இளைஞர் அணியான டி.ஒய்.எப்.ஐ., சார்பில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் (டி.ஆம்.எம்.,) அலுவலகத்தை நோக்கி முற்றுகையிட சென்றனர்.
காலை, 8:00 மணியளவில் டி.ஒய்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் ஜெயதேவன் தலைமையில் திரண்ட நுாற்றுக்கணக்கான தொண்டர்கள், டி.ஆர்.எம்., அலுவலகத்தின் நான்கு முக்கிய நுழைவுவாயில்களையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் நுழைவுவாயில்களை பூட்டி தடுப்புகளை வைத்த போதிலும், தடுப்புகளை மீறியும், சுவர்கள் மற்றும் கேட் மீது ஏறி குதித்து அலுவலக வளாகத்திற்குள் புகுந்தனர். வெளியே நின்ற தொண்டர்கள் கதவுகளை தள்ளி திறந்து உள்ளே செல்ல முயன்றதால், போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பின், வளாகத்திற்குள் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும், போலீசார் கைது செய்தனர்.
