/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பார்க்கிங் தளமான சாலை; பயணிகள் பஸ் ஏற சிரமம்
/
பார்க்கிங் தளமான சாலை; பயணிகள் பஸ் ஏற சிரமம்
ADDED : ஜூலை 14, 2025 08:55 PM

பந்தலுார்; பந்தலுார் பஜாரில் சாலை ஓரங்கள் 'பார்க்கிங்' தளங்களாக மாறுவதால், பஸ் ஏறுவதில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
பந்தலுார் பஜார் பகுதியில் தாசில்தார் அலுவலகம், நீதிமன்றம், அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பஜார் பகுதி சாலையை பலரும் ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டி உள்ளதால் சாலை குறுகலாகவே உள்ளது.
இந்த குறுகலான சாலையில் இரண்டு பக்கங்களிலும் தனியார் வாகனங்களை பார்க்கிங் செய்து செல்வதால், கனரக வாகனங்கள் வரும்போது பெரும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் பஸ் நின்று பயணிகள் ஏறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது.
இந்நிலையில், 'நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இணைந்து, பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை ஓரங்களில் பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்க வேண்டும். தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அதிகாரிகள் பந்தலுார் பஜாரில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றி, வாகனங்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.