/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெளிநாடு செல்ல வரிசையில் நின்ற பயணி உயிரிழப்பு
/
வெளிநாடு செல்ல வரிசையில் நின்ற பயணி உயிரிழப்பு
ADDED : டிச 14, 2024 01:08 AM

சென்னை:வெளிநாடு செல்ல குடியுரிமை சோதனைக்காக, வரிசையில் நின்ற தமிழக பயணி, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் செல்லும் விமானம், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
பயணியர் பலர் போர்டிங் பாஸ் பெற்றதுடன், குடியுரிமை சோதனை முடித்து, விமானத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.
அப்போது, நண்பர்களுடன் பாங்காக் சுற்றுலா செல்வதற்காக, ஊட்டியை சேர்ந்த அற்புத சகாயராஜ், 52, வந்திருந்தார். அவர் குடியுரிமை சோதனைக்காக, பயணியர் வரிசையில் நின்றார்.
அந்த நேரத்தில், திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்தார். அவரது நண்பர்கள், விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அவருடன் வந்த மூவரின் பயணமும் ரத்து செய்யப்பட்டது. இதனால், விமானம் தாமதமாக, நேற்று நள்ளிரவு, 12:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

