போதிய பஸ் இல்லாததால் சிரமத்திற்கு ஆளான பயணிகள்: நின்று கொண்டு தொலை துார பயணத்தால் அவதி
போதிய பஸ் இல்லாததால் சிரமத்திற்கு ஆளான பயணிகள்: நின்று கொண்டு தொலை துார பயணத்தால் அவதி
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:04 PM

கூடலூர்: தொடர் விடுமுறை முடிந்த நிலையில் பஸ் ஸ்டாண்டில் குவிந்த பயணிகள், சமவெளிக்கு செல்ல பஸ் கிடைக்காததால் சிரமத்திற்கு ஆளாகினர்.
கூடலூரில், போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், மக்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் குடும்பத்துடன தங்கி தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயின்று வருகின்றனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறையால் கூடலூர் வந்து குடும்பத்துடன் தங்கினர். விடுமுறை முடிந்து, மீண்டும் சமவெளி பகுதிகளுக்கு செல்வதற்காக, நேற்று, கூடலூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர்.
சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்து வந்த பயணிகள், வழக்கமான அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டதால், பஸ் கிடைக்காமல், நீண்ட நேரம் காத்திருந்தனர். இருக்கைகள் கிடைக்காத நிலையிலும், சிலர் கிடைக்கும் பஸ்சில் நின்று கொண்டு பயணித்தனர். பலர் பஸ் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.
சிரமத்திற்கு ஆளான பயணிகள்
சுரேஷ்குமார் கூறுகையில், '' சமவெளிப் பகுதிகளில் தங்கி வேலை மற்றும் கல்வி பயின்று வரும் கூடலூர் பகுதியை சேர்ந்தவர்கள், தொடர் விடுமுறை காரணமாக, கூடலூர் வந்து இன்று (நேற்று) திரும்பி சொல்வதற்காக கூடலூர் பஸ் ஸ்டாண்டில் குவிந்தனர். கூடுதல் பஸ்கள் இயக்காததால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர். பலர் பஸ் கிடைக்காமல் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர். இது போன்ற சிரமங்களை தவிர்க்க முக்கிய பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.
அதேபோல், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விடுமுறையை முடித்து சமவெளி பகுதிகளுக்கு செல்ல பயணிகள் குவிந்த நிலையில் போதிய பஸ் இல்லாததால் வழக்கமாக செல்லும் பஸ்களில் முண்டியடித்து சீட் பிடித்து தொலை துாரம் நின்று பயணம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
