/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழுமை பெறாத நடைபாதை நாள்தோறும் பாதசாரிகள் அவதி
/
முழுமை பெறாத நடைபாதை நாள்தோறும் பாதசாரிகள் அவதி
ADDED : ஜன 09, 2026 06:34 AM
கூடலுார்: கூடலுாரில், தேசிய நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் கால்வாயுடன் கூடிய நடைபாதை பணி முழுமை பெறாததால் மக்கள் அதிருப்தி அடைந் துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள கழிவுநீர் கால்வாயுடன் கூடிய, நடைபாதை சேதமடைந்துள்ளது. அதில், 450 மீட்டர் துாரம் சீரமைக்க, கடந்த ஆண்டு சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம், 95 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான பணி கடந்த ஆண்டு அக்., மாதம் துவங்கப்பட்டது. பணிகளை ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர், 'தற்போதுள்ள கழிவு நீர் கால்வாயை சேதப்படுத்தாமல், அதனை சற்று உயர்த்தி, அதன் மீது, நடைபாதை அமைக்க வேண்டும்,' என, உத்தரவிட்டதுடன், இதற்கான நிதியை, 38 லட்சம் ரூபாயாக குறைத்தார்.
அதன்படி, பழைய பஸ் ஸ்டாண்ட் முதல், புதிய பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா வரை, மூன்று அடி அகலத்தில் நடை பாதை அமைக்கப்பட்டது. இதனிடையே, நடைபாதையின் அகலம், 3 அடியாக இருப்பதால் மக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது.
எனவே, நடைபாதையில் அகலத்தை, 5 அடியாக மாற்ற வலியுறுத்தப்பட்டது. நடைபாதையை ஆய்வு செய்ய அதிகாரிகள் இதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.
நடைபாதை பணிகள் முழுமை பெறாத நிலையில், அகலம் குறைவான நடைபாதையில் மக்கள் சிரமப்பட்டு நடந்து வருகின்றனர்.

