/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமத்தில் பென்ஷன் வழங்கும் திட்டம் நிறுத்தம்... முதியோர் அலைக்கழிப்பு!
/
கிராமத்தில் பென்ஷன் வழங்கும் திட்டம் நிறுத்தம்... முதியோர் அலைக்கழிப்பு!
கிராமத்தில் பென்ஷன் வழங்கும் திட்டம் நிறுத்தம்... முதியோர் அலைக்கழிப்பு!
கிராமத்தில் பென்ஷன் வழங்கும் திட்டம் நிறுத்தம்... முதியோர் அலைக்கழிப்பு!
ADDED : டிச 09, 2024 09:42 PM

பந்தலுார் : மலை மாவட்டத்தில், கிராமங்களுக்கு நேரடியாக சென்று பென்ஷன் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டதால், முதியோர் சிரமப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
'முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதிர் கன்னிகள்,' என, பல்வேறு தரப்பினருக்கு, மாநில அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மூலம் பென்சன் தாரர்களின் வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
தொடர்ந்து, வங்கி பணியாளர்கள், கிராமங்களுக்கு நேரடியாக சென்று, பயனாளிகளின் கைரேகை பெற்று பென்சன் தொகை வழங்கி வந்தனர்.
இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு, ஒவ்வொரு பயனாளிகளின் பெயரிலும் தலா, 30 ரூபாய் கமிஷனாக வழங்கப்பட்டு வந்தது.
சில மாதங்களாக நிறுத்தம்
கடந்த சில மாதங்களாக கமிஷன் நிறுத்தப்பட்டதால், வங்கி பணியாளர்கள் பென்ஷன் வழங்கும் பணியில் ஈடுபட முடியவில்லை.
தற்போது, சம்பந்தப்பட்ட பயனாளிகள், வங்கிக்கு நேரடியாக சென்று ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்த தகவல் தெரியாமல், தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த முதியோர் அலை கழிக்கப்படுகின்றனர்.
மேலும், தனியார் நிதி நிறுவனங்களில் சென்று, கமிஷன் கொடுத்து தங்கள் ஓய்வூதியத்தை பெற்று செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
தபால் நிலையத்தில் வழங்க வேண்டும்
பயனாளிகள் கூறுகையில்,'எங்களுக்கான பென்ஷன் தொகையை, ஏற்கனவே வழங்கியது போல் அந்தந்த பகுதி தபால் நிலையங்களுக்கு அனுப்பினால், சிரமம் இன்றி ஓய்வூதியத் தொகையினை பெற்றுக்கொள்ள இயலும். எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து, வரும் மாதங்களில் அந்தந்த பகுதி தபால் நிலையங்களில் பயனாளிகளுக்கான, பென்சன் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்தால் பயன் ஏற்படும்,' என்றனர்.
-பந்தலுார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லதா கூறுகையில், ''தமிழகம் முழுவதும் கிராமங்கள் வாயிலாக சென்று வழங்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு, வங்கிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷன் தொகை நிறுத்தப்பட்டதால், வங்கி நிர்வாகம் கிராமங்களுக்கு சென்று வழங்க மறுத்து விட்டது.
இதனால், பயனாளிகளின் வங்கி கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்படுவதால், அவர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று தங்கள் ஓய்வூதிய தொகையை பெற்று கொள்ளலாம். ஒரு சில பகுதிகளில் தபால் நிலைய கணக்குகளுக்கும் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.