/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூட்டமாக வந்த கரடிகளால் மக்கள் அச்சம்
/
கூட்டமாக வந்த கரடிகளால் மக்கள் அச்சம்
ADDED : ஜன 29, 2024 11:45 PM
கோத்தகிரி;கோத்தகிரி சேலாடா பகுதி குடியிருப்புக்குள் கூட்டமாக நுழைந்த கரடிகளால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
கோத்தகிரி அரவேனு அருகே, வனப்பகுதியை ஒட்டி சேலாடா கிராமம் உள்ளது. இக்கிராம எல்லையில், சிறுத்தை கரடி மற்றும் காட்டெருமை வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, கிராம குடியிருப்புக்குள் நுழைந்த, நான்கு கரடிகள், அதே பகுதியில் சுற்றி திரிந்துள்ளன. வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்து, சப்தம் போட்டு துரத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் கரடிகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றன. அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் கரடிகள் உலா வரும் காட்சி பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மக்கள் கூறுகையில், 'ஒரே பகுதியில் சுற்றித்திரியும் கரடிகளை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும்,' என்றனர்.