/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நகரில் பகலில் அதிகரிக்கும் கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி
/
நகரில் பகலில் அதிகரிக்கும் கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி
நகரில் பகலில் அதிகரிக்கும் கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி
நகரில் பகலில் அதிகரிக்கும் கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி
ADDED : ஜூலை 13, 2025 08:32 PM

ஊட்டி; ஊட்டி சுற்றுப்புற பகுதி களில் அதிகரித்து வரும் கரடி நடமாட்டத்தால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரியில் சமீப காலமாக குடியிருப்புகளில் உலா வரும் வன விலங்குகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, கிராமம், நகர் பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இரவு, பகல் நேரங்களில் சுற்றித்திரியும் கரடிகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதுடன், கடைகள், வீடுகளின் கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
மஞ்சூர் அருகே கண்டிபிக்கையில் சிவன் கோவிலில், நான்கு நாட்களுக்கு முன்பு நுழைந்த கரடி கதவை உடைத்து கோவில் பொருட்களை சூறையாடி சென்றது. அங்கேயே சுற்றித்திரிந்த கரடி, மீண்டும் நேற்று முன்தினம் இரவு புதிதாக மாற்றப்பட்ட கதவை உடைத்துள்ளது.
அடுத்தடுத்து கோவில் கதவு உடைக்கப்பட்டு வருவதால் கண்டிபிக்கை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆய்வுக்கு வந்த வனத்துறையினரிடம், 'கூண்டு வைத்து கரடியை பிடிக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
ஊட்டி 'ஹேவ்லாக்' சாலையின் மேல்புறத்தில் ஏராளமான சுற்றுலா தங்கும் விடுதிகள் உள்ளன. அங்குள்ள விடுதியில் நேற்று அதிகாலையில் ஒரு கரடி நுழைந்தது. இதனை பார்த்த பயணிகள் அச்சமடைந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்றனர். அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. அதேபோல, தலையாட்டு மந்து பகுதியில் காலை நேரத்தில் குடியிருப்பு பகுதிக்கு கரடி வந்தபோது, அப்பகுதியில் இருந்து நாய்கள் விரட்டின.
பொது மக்கள் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் கரடி நடமாட்டம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகிறோம். நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து முதுமலை வனப்பகுதியில் விட வேண்டும்,' என்றனர்.