/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
35 வீடுகளை இடித்த காட்டு யானை பிடிபட்டதால் நிம்மதியில் மக்கள்! மனித- விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்
/
35 வீடுகளை இடித்த காட்டு யானை பிடிபட்டதால் நிம்மதியில் மக்கள்! மனித- விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்
35 வீடுகளை இடித்த காட்டு யானை பிடிபட்டதால் நிம்மதியில் மக்கள்! மனித- விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்
35 வீடுகளை இடித்த காட்டு யானை பிடிபட்டதால் நிம்மதியில் மக்கள்! மனித- விலங்கு பிரச்னைக்கு தீர்வு காண்பது அவசியம்
ADDED : டிச 29, 2024 11:33 PM

பந்தலுார்: 'பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், 35 வீடுகளை இடித்த 'புல்லட்' யானை பிடிக்கப்பட்டு ஆனைமலைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், இப்பகுதியில் தொடரும் மனித- விலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பந்தலுார் மற்றும் சேரம்பாடி பிதர்காடு சுற்று வட்டார பகுதிகளில் புல்லட் என்று அழைக்கப்படும் ஆண் யானை, தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து உணவு பொருட்களை ருசிப்பதில் ஆர்வம் காட்டியது. இரவு, 7:00 மணிக்கு மேல் குடியிருப்பு பகுதிகளுக்கு, வந்து வீடுகளை இடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 35க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்த நிலையில், வனத்துறையினர் இரண்டு கும்கிகளை வைத்து வனத்திற்குள் விரட்ட முயற்சி செய்தனர்.
ஆரம்ப நிலையில் கவனிக்க வேண்டும்
ஆனால், வனத்துறை முயற்சி பயன் அளிக்காத நிலையில், பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்து, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சென்றனர். இப்பகுதி மூன்று மாநில சந்திப்பு பகுதியாக உள்ள நிலையில், தற்போதும் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால், வனத்தில் வறட்சி ஏற்படும் போது யானைகள் இப்பகுதியில் உள்ள 'டான்டீ' குடியிருப்புகள்; கிராமங்களுக்கு வருவது தொடர்கிறது. ஆனால், வனத்துறை உயரதிகாரிகள் ஆரம்ப நிலையில் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்துவதால், பாதிப்புகள் அதிகரித்து, வன விலங்குகள் மீது மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.
கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''கூடலுார் வனக்கோட்டத்தில், 90 யானைகள் இருக்கும் நிலையில், அதில், 16 யானைகள் மட்டுமே மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து அச்சுறுத்தி வருவது தெரியவந்துள்ளது.
இதனால் இரவு மற்றும் பகல் நேரங்களில், வனக்குழுவினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, இதுபோன்ற யானைகளை அடர்த்தியான வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகள் தொடரும்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த கணபதி கூறுகையில்,'' இப்பகுதிகளில் வன விலங்குகளும் மனிதர்களும் இணைந்து வாழ்ந்து வருகிறோம். வீடுகளில் முன்பாக யானைகள் உட்பட சில விலங்கினங்கள் வந்து செல்லும் நிலையில், மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி சேதம் ஏற்படுத்தும் சில விலங்குகளை மட்டுமே பிடித்து செல்ல அறிவுறுத்துகிறோம்.
அதனை உயர் அதிகாரிகள் புரிந்து கொண்டு மக்களுக்கும்; வன விலங்குகளுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தும் விதமாக, உடனடி நடவடிக்கை எடுத்தால் அதிகரிக்கும் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.
புல்லட் யானை பிடிக்கப்பட்டதால் இப்பகுதிகளில் உள்ள கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளோம். இதில், ஈடுபட்ட வனத்துறையினருக்கு எங்களின் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்,'' என்றார்.