/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரேஷன் கடை கட்டுமான பணி திடீர் நிறுத்தம் போராட்டம் நடத்த மக்கள் முடிவு
/
ரேஷன் கடை கட்டுமான பணி திடீர் நிறுத்தம் போராட்டம் நடத்த மக்கள் முடிவு
ரேஷன் கடை கட்டுமான பணி திடீர் நிறுத்தம் போராட்டம் நடத்த மக்கள் முடிவு
ரேஷன் கடை கட்டுமான பணி திடீர் நிறுத்தம் போராட்டம் நடத்த மக்கள் முடிவு
ADDED : செப் 27, 2024 11:51 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே சோலாடி பகுதியில் ரேஷன் கடை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சோலாடி கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியினர் உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், 4 கி.மீ., தொலைவில் உள்ள பிதர்காடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர வேண்டிய நிலை உள்ளது.
இந்த பகுதியில் யானை, புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகம் உள்ளதால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மாலை நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு சென்று வீடு திரும்பும் போது பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. கிராமத்திற்கு செல்ல ஆட்டோ வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில், பழங்குடியின மக்கள் சிரமப்படுகின்றனர்.
இதனால், சோலாடி பகுதியில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, 'நிலம் வாங்கி தந்தால் கட்டடம் கட்டப்படும்,' என, கூட்டுறவுத்துறை தெரிவிக்கப்பட்ட நிலையில், முகமது என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 5 சென்ட் நிலத்தை பொதுமக்கள் இணைந்து வாங்கி, கூட்டுறவுத்துறையிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 19 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணி துவக்கப்பட்டது.
பணி மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென வருவாய் துறையினர், 'இந்த இடம் செக்சன்-17 பிரிவுக்கு உட்பட்ட இடம்; அதனால் இங்கு கட்டுமானம் ஏதும் மேற்கொள்ளக்கூடாது,' என, கூறி கட்டட பணி மேற்கொள்ள தடை விதித்தனர்.
பழங்குடியின மக்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில், ரேஷன் கடை அமைக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென வருவாய் துறையினர் தடை விதித்ததால், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்துள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'கூட்டுறவுத்துறை; மக்கள் இணைந்து ரேஷன் கடை கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இந்த தடையை நீக்க வேண்டும், என, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.