/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் டிவைடரை அகற்ற மக்கள் கோரிக்கை
/
சாலையில் டிவைடரை அகற்ற மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 31, 2024 11:41 PM

மேட்டுப்பாளையம் : காரமடையில் சாலையின் நடுவே வைத்துள்ள டிவைடரால், அரங்கன் நகர் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் சாலையில், காரமடை நகரின் நுழைவு வாயிலில், தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்துள்ளது. சாலையில் நடுவே டிவைடர் வைக்கப்பட்டுள்ளது.
டிவைடர் துவங்கும் சிறிது தூரத்தில், அரங்கன் நகருக்கு செல்லும் வழி உள்ளது. இந்த சாலையில் திருமண மண்டபம், கூட்டுறவு வங்கி, வணிக நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த டிவைடரால், அரங்கன் நகர் பொதுமக்களும், வங்கி, மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செல்லும் பொது மக்கள், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள, காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை அரை கிலோ மீட்டர் சென்று, அங்கிருந்து சுற்றிக்கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, காரமடை மின் மயானத்திற்கு வரும் வாகனங்கள், காரமடை ரெவென்யூ இன்ஸ்பெக்டர் அலுவலகம் வரை வந்து, அங்கிருந்து சுற்றிக்கொண்டு மின் மயானம் செல்ல வேண்டும். இது மாதிரி வாகனங்கள் சுற்றிக்கொண்டு செல்வதால், போக்குவரத்து நெரிசலும், சிறுசிறு விபத்துக்களும் ஏற்படுகிறது.
அதனால் அரங்கன் நகர் செல்லும் இடத்தில், சாலையின் நடுவில் வைத்துள்ள டிவைடரை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். எனவே இந்த மனுக்கள் மீது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என, பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.