/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கராலில் வைக்கப்பட்ட யானையை முதுமலையில் விட மக்கள் ஆட்சேபம்! 'ரேடியோ காலர்' பொருத்தினாலும் பயன் ஏதுமில்லை
/
கராலில் வைக்கப்பட்ட யானையை முதுமலையில் விட மக்கள் ஆட்சேபம்! 'ரேடியோ காலர்' பொருத்தினாலும் பயன் ஏதுமில்லை
கராலில் வைக்கப்பட்ட யானையை முதுமலையில் விட மக்கள் ஆட்சேபம்! 'ரேடியோ காலர்' பொருத்தினாலும் பயன் ஏதுமில்லை
கராலில் வைக்கப்பட்ட யானையை முதுமலையில் விட மக்கள் ஆட்சேபம்! 'ரேடியோ காலர்' பொருத்தினாலும் பயன் ஏதுமில்லை
ADDED : செப் 26, 2025 09:08 PM

கூடலுார்:
'கூடலுார், ஓவேலியில் பிடித்து, முதுமலையில் உள்ள கராலில் அடைக்கப்பட்ட காட்டு யானையை முதுமலை வனத்தில் விட்டால் பாதிப்பு ஏற்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அச்சுறுத்தும் காட்டு யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று, வளர்ப்பு யானையாக மாற்றி வந்தனர்.
சில ஆண்டுகளாக, இவ்வாறு பிடிக்கப்படும் காட்டு யானைகளுக்கு, 'ரேடியோ காலர்' பொருத்தி வனத்தில் விடுவித்து வருகின்றனர்.
இரு ஆண்டுக்கு முன்பு, ஒசூரில் பிடிக்கப்பட்ட காட்டு யானைக்கு, 'ரேடியோ காலர்' பொருத்தி, முதுமலை மசினகுடி தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை சில வாரங்களில் உயிரிழந்தது.
கோவையில் பிடிக்கப்பட்ட விநாயகன் என்ற யானை, முதுமலையில் விடப்பட்டது. அந்த யானை கர்நாடகா மாநில வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்து, மக்களை அச்சுறுத்தியது. கர்நாடகா வனத்துறையினர் அதனைப்பிடித்து, வளர்ப்பு யானையாக மாற்றினர். திடீரென அந்த யானை உயிரிழந்தது.
ஒசூர் பகுதியில் பிடிக்கப்பட்டு முதுமலையில் விடப்பட்ட, 'குரோபர்' என்ற யானையை, கர்நாடகா வனத்துறையினர் பிடித்து, கும்கி யானையாக மாற்றியுள்ளனர். மீண்டும் ஒசூரில் பிடிக்கப்பட்ட கொய்யா கொம்பன் என்ற மற்றொரு யானை, முதுமலை மசினகுடி காங்கிரஸ் மட்டம் வனப்பகுதியில் விடுவித்தனர். அந்த யானையின் நிலை இதுவரை தெரியவில்லை.அதன்பின், கூடலுாரில் மக்களை அச்சுறுத்தி பிடிக்கப்பட்ட, 'பி.எம்.,-2' என்ற காட்டு யானை, முதுமலை வனப்பகுதியில் விட்டனர். அந்த யானை கேரள வனப்பகுதிக்கு சென்று, மக்களை அச்சுறுத்தியதால், கேரளா வனத்துறையினர் பிடித்து, கும்கி யானையாக மாற்றியுள்ளனர்.
இதேபோல, கடந்த இரு ஆண்டுகளாக மாவனல்லா குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்த 'ரிவால்டோ' என்ற யானையை பிடித்து, கராலில் சில வாரங்கள் வைத்து, முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். அந்த யானை மீண்டும் மாவனல்லா பகுதியில் நாள்தோறும் உலா வருகிறது.
இந்நிலையில், ஓவேலி பகுதியில், 23ம் தேதி, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட, ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை, முதுமலை அபயாரண்யம் யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று கராலில் அடைத்து கண்காணித்து வருகின்றனர்.
மூன்று வாரத்திற்கு பின் யானையை 'ரேடியோ காலர்' பொருத்தி வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளனர். 'யானையை, எந்த வனப்பகுதியில் விடுவிப்பது என்பது குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 'இந்த யானையை, முதுமலை வனப்பகுதியில் விடுவிக்க கூடாது,' என, உள்ளூர் பொதுமக்கள், கால்நடை மருத்துவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
பிரகதி அறக்கட்டளை அறங்காவலர் கால்நடை டாக்டர் சுகுமாரன் கூறுகையில், ''ஓவேலியில் பிடிக்கப்பட்ட, காட்டு யானையை முதுமலை வனப்பகுதிக்குள் விடுவித்தால், அந்த யானை மீண்டும், ஓவேலி, மசினகுடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து, மக்களை அச்சுறுத்தும் ஆபத்து உள்ளது.
அந்த யானையை குடியிருப்புகள் இல்லாத சமவெளியின் அடர்ந்த வனப்பகுதியில் விட்டால், எவ்வித பிரச்னையும் ஏற்படாது. அங்கும் பிரச்னை ஏற்பட்டால், அதனை வளர்ப்பு யானையாக மாற்றுவதை தவிர வேறு வழியில்லை,'' என்றார்.