/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண மனு அளித்த மக்கள்
/
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண மனு அளித்த மக்கள்
ADDED : ஜூலை 25, 2025 08:39 PM

கோத்தகிரி; கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, புடியங்கி கிராமத்தில், 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்திற்கு வினியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது.
இதனால், கிராம மக்கள் ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து, தலையை சுமந்து, தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதிருப்தி அடைந்த கிராம மக்கள் ஒருங்கிணைந்து, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு, வெட்டப்பட்ட அள்ளபிக்கை கிணற்றை துார்வாரி, 500 மீட்டர் துாத்திற்கு குழாய்கள் பொருத்தி, மின் மோட்டார் அமைத்து தண்ணீர் வினியோகிக்க வேண்டும்,' என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, 'கிணற்றை துார்வார சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'என்றார்.

