/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
/
யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
யானை தாக்கி பலியானவர் உடலுடன் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் டி.எப்.ஓ., - எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
ADDED : ஆக 11, 2025 11:54 PM

கூடலுார்: கூடலுார் பகுதியில் காட்டு யானை தாக்கி பலியானவர் உடலை சாலையில் வைத்து மக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஓவேலி நியூஹோப் பகுதியில் உள்ள, தனியார் எஸ்டேட்டில் பணியாற்றி வந்தவர் மணி,63. இவரும், அதே பகுதியை சேர்ந்த சந்திரமோகன் என்பவரும், நேற்று காலை, 9:00 மணிக்கு ஏலக்காய் தோட்டம் வழியாக நடந்து சென்றுள்ளனர்.
அங்கு படுத்திருந்த காட்டு யானை திடீரென எழுந்து அவர்களை துரத்தியது. இருவரும், தப்பி ஓடினர். அப்போது, யானை மணியை தாக்கியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சந்திரமோகன் உயிர் தப்பினார். யானை அதே பகுதியில் முகாமிட்டிருந்தது.
உடலை சாலையில் வைத்து போராட்டம் இந்த சம்பவத்தால், ஆத்திரமடைந்த மக்கள் இறந்தவர் உடலை எடுத்து வந்து, காலை, 10:30 மணி முதல் ஓவேலி சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், கூடலூர் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலனும் பங்கேற்றார். அப் பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, வனச்சரகர்கள் ரவி, மீரான் இலியாஸ் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி அறிவுறுத்தினர். மக்கள் அதனை ஏற்காமல் வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த, கூடலுார் டி.எப்.ஓ., வெங்கடேஷ் பிரபு, போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மற்றும் மக்களிடம் பேசுகையில், ''உயர் அதிகாரிகள் அனுமதி பெற்று, இங்கு முகாமிட்டுள்ள யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேவர்சோலையில், மாடுகளை தாக்கி கொன்ற புலியை பிடிக்க அனுமதி பெற்ற பின் சிலர், தங்களால் அனுமதி கிடைத்தது கூறி வருகின்றனர்,'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலுார் எம்.எல்.ஏ., பேசுகையில், ''மக்கள் போராட்டத்தையும், மக்களுக்காக போராடுபவர்களையும் விமர்சனம் செய்ய கூடாது,'' என கூறி, டி.எப்.ஓ.,விடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டடார். டி.எஸ்.பி., அவரை சமாதானப்படுத்தினார். அதன்பின் மக்கள் சமாதானம் அடைந்து, 3:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. நியூஹோப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.