/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்த திட்டம்! எண்களில் அடையாளப்படுத்தி அனுமதி பெறவும் முயற்சி
/
சாலையோரம் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்த திட்டம்! எண்களில் அடையாளப்படுத்தி அனுமதி பெறவும் முயற்சி
சாலையோரம் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்த திட்டம்! எண்களில் அடையாளப்படுத்தி அனுமதி பெறவும் முயற்சி
சாலையோரம் உள்ள விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்த திட்டம்! எண்களில் அடையாளப்படுத்தி அனுமதி பெறவும் முயற்சி
ADDED : பிப் 13, 2025 10:11 PM

கூடலுார்; கூடலுார் தேவர்சோலை சாலையோரம் ஆபத்தான மரங்கள் என்ற பெயரில் விலை உயர்ந்த மரங்களை, 'எண்களை' கொண்டு அடையாளப்படுத்தி வெட்டி கடத்தும் முயற்சி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், மழை காலங்களில் சாலையோரம் காணப்படும் ஆபத்தான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், கட்டடங்களும் சேதமடைகின்றன. இதனை தவிர்க்க,மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் உள்ளஆபத்தான கற்பூர மரங்கள்உட்பட பிற மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
அதில், 'ஒவ்வொரு பகுதிகளில் ஆபத்தான மரங்கள் குறித்து பட்டியல் எடுத்து, ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு செய்து, எண்களில் அடையாளப்படுத்த வேண்டும். அதன் பின்பு, டெண்டர் விட்டு அதனை மட்டும் வெட்ட வேண்டும்,' என்ற உத்தரவு உள்ளது.
ஆனால், ஆபத்தான மரங்கள் என்ற பெயரில் சாலையோர வனப்பகுதியில் உள்ள நல்ல நிலையில் உள்ள மரங்கள்; விலை உயர்ந்த காட்டு மரங்களை வெட்டி வருவதாக, புகார் எழுந்தது. இது குறித்து வனத்துறையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அயனி பலா மரங்களுக்கு ஆபத்து
இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், கூடலுாரில் கடந்த ஆண்டு, நர்த்தகி அருகே, ஆபத்தான மரம் என்ற பெயரில் விலை உயர்ந்த அயனி பலா மரத்தை வெட்டி சாய்த்தனர். இதேபோல, ஊட்டி, கோத்தகிரி பகுதிகளிலும் நல்ல நிலையில் இருந்த மரங்களை வெட்டும் முயற்சி நடந்தது. இதனை ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், மரத்தை எடுத்து செல்ல அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், கூடலுாரில் தேவர்சோலை போலீஸ் ஸ்டேஷன் அருகே, சாலையோரம் உள்ள விலை உயர்ந்த பழமையான அயனி பலா உள்ளிட்ட, 16க்கும் மேற்பட்ட மரங்களில், எண்களை கொண்டு அடையாளப்படுத்தி, 'ஆபத்தான மரங்கள்' என்ற போர்வையில் வெட்ட அனுமதி பெற முயற்சி நடப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் புகார் எழுப்பி உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இங்குள்ள பகுதிகளில் ஆபத்தான மரங்களின் கிளைகள் கூட அகற்றப்படாத நிலையில்,விலை உயர்ந்த மரத்தை ஆபத்தான மரம் என்று தெரிவித்து, அனுமதி பெற்று வெட்ட முயற்சி நடப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கூறுகையில், 'ஆபத்தான மரங்கள் என்ற பெயரில் விலை உயர்ந்த மரங்களை குறி வைத்து வெட்டுவதை தடுக்க, அரசு துறையினர் ஒருங்கிணைந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இப்பகுதியில் மரக்கடத்தல் கும்பல் மரங்களில் எண்களை எழுதி வெட்டி கடத்த வாய்ப்புள்ளது,' என்றனர்.
கூடலுார் தாசில்தார் முத்துமாரி கூறுகையில், ''ஆபத்தான மரங்களை வெட்டுவது தொடர்பாக, மனு அளிக்கப்பட்டால், குறிப்பிட்ட பகுதியில் ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். அதன்பின் எண்களை எழுதி அனுமதி வழங்கப்படும். தேவர்சோலை பகுதியில் ஆபத்தான மரம் உள்ளதாக மனு எதுவும் வரவில்லை.
''அங்குள்ள மரங்களை எண்களில் அடையாளப்படுத்தி உள்ளது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.