/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கெத்தையில் மின் உற்பத்தி 350 மெகாவாட்டாக அதிகரிப்பு கோடையை சமாளிக்க திட்டம்!; மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை
/
கெத்தையில் மின் உற்பத்தி 350 மெகாவாட்டாக அதிகரிப்பு கோடையை சமாளிக்க திட்டம்!; மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை
கெத்தையில் மின் உற்பத்தி 350 மெகாவாட்டாக அதிகரிப்பு கோடையை சமாளிக்க திட்டம்!; மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை
கெத்தையில் மின் உற்பத்தி 350 மெகாவாட்டாக அதிகரிப்பு கோடையை சமாளிக்க திட்டம்!; மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வினியோகிக்க நடவடிக்கை
ADDED : பிப் 10, 2025 06:42 AM
ஊட்டி: கோடையில் அதிகபட்ச மின் தேவையை சமாளிக்க, கெத்தை மின் நிலையத்தில், காலை; மாலை வேளையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், 12 மின் நிலையங்கள், 13 அணைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. மின் நிலையங்களில் உள்ள, 32 பிரிவுகளின் கீழ், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
தற்போது, அணைகளில், 80 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது. 'இதை கொண்டு, மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்,' என, மின் வாரியம் எதிர்பார்த்துள்ளது.
அதே சமயத்தில், குந்தா நீரேற்று மின் திட்டப்பணிக்காக, 130 அடி கொண்ட போர்த்திமந்து மற்றும் 184 அடி கொண்ட எமரால்டு அணைகளிலிருந்து, 160 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இதுவரை, 125 அடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
குந்தா அணையில் சேமிப்பு
எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நீரோடை வழியாக குந்தா அணையில் சேகரமாகிறது. மின் பணிக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கூடுதலாக கிடைப்பதால் கெத்தை, பரளி, பில்லுார் மின் நிலையங்களுக்கும் தேவைக்கேற்ப கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால், எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்ததால் குன்னுார் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனை ஈடுசெய்ய மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
350 மெகாவாட் உற்பத்தி
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், 80 சதவீதம் ஈரோடு, மதுரை, சென்னை மாவட்டங்களில் உள்ள மின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
இனி வரும் நாட்களில் கோடையை சமாளிக்கும் வகையில், மின்சாரத்தை சேமிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இங்குள்ள, 12 மின் நிலையங்கள் மூலம் தினசரி, 650 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அதில், கெத்தை மின்நிலையத்தில் காலை, 6:00 மணி முதல் 8:00 மணி; மாலை, 6:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை உச்ச மின் தேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
'இங்குள்ள, 5 பிரிவுகளில் தலா, 35 மெகாவாட் வீதம், காலை நேரத்தில், 175 மெகாவாட்; மாலை நேரத்தில், 175 மெகாவாட்,' என, 350 மெகாவாட் உச்ச மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'கோடையை சமாளிக்க மின்வாரியம் இப்போதே நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, கெத்தை மின் நிலையத்தில் உச்சமின் தேவை, 350 மெகாவாட்டாக உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிற மின் நிலையங்களிலும் தேவைக்கேற்ப உற்பத்தியை அதிகரிக்க தயார் நிலையில் உள்ளோம்,' என்றனர்.