/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள்; அதிகாரிகள் முறையாக கொண்டு செல்ல அறிவுரை
/
நீலகிரி பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள்; அதிகாரிகள் முறையாக கொண்டு செல்ல அறிவுரை
நீலகிரி பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள்; அதிகாரிகள் முறையாக கொண்டு செல்ல அறிவுரை
நீலகிரி பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள்; அதிகாரிகள் முறையாக கொண்டு செல்ல அறிவுரை
ADDED : ஏப் 07, 2025 09:23 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே சூரத் பழங்குடியினர் கிராமத்தில் சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.
பழங்குடியின மக்கள் மத்தியில் அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள்; கிராம சபை கூட்டங்கள் குறித்த விளக்கங்கள்; அரசுத்துறை அதிகாரிகள் பழங்குடியின மக்களை மத்தியில் ஏற்படுத்தும் பிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, பழங்குடியின மக்கள் பேசுகையில், 'வன உரிமை பாதுகாப்பு சட்டம் குறித்து, கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது. அதில், வன உரிமை சட்டம் மற்றும் கிராம சபை கூட்டத்தின் முக்கிய அம்சம் குறித்து, தங்களிடம் ஊராட்சி அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
மேலும், அரசு மூலம் கட்டி தரப்படும் தொகுப்பு வீடுகள் மழை காலங்களில் குடியிருக்க முடியாத அளவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. குடிநீர் மற்றும் நடைபாதை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்,' என்றனர்.
தொடர்ந்து, நீதிபதி பாலமுருகன் பேசியதாவது:
பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், நடத்தப்படும் அரசு நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களில் முதலில் அவர்கள் புரிந்து கொள்ள ஏதுவான மொழியில் பேச வேண்டும். மேலும், நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் குறித்து பேசவும், பழங்குடியினர் மக்களின் கருத்துக்களை கேட்டு அதை பதிவு செய்து அரசுக்கு அனுப்பவும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் முன் வரவேண்டும்.
தரமற்ற குடியிருப்புகள் கட்டியது குறித்து, பழங்குடியின மக்கள் வழங்கும் மனுக்கள் அடிப்படையில், உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படும். பழங்குடியின மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து சென்றால் மட்டுமே, அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை முறையாக பெற்று பயன்பெற முடியும்.
அடுத்த முகாம்களின் போது ஆய்வு செய்து, பழங்குடியின மக்களின் குறைகள் குறித்து நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பழங்குடியின மக்களிடமிருந்து பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களை நீதிபதி பெற்று கொண்டார். மக்களுக்கு உடைகள் மற்றும், மாணவர்களுக்கான தளவாட பொருட்களை வழங்கினார்.
முகாமில், சேரங்கோடு ஊராட்சி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், வனச்சரகர் அய்யனார், மின்வாரிய சிறப்பு நிலை முகவர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர். சட்ட பணிகள் குழு பணியாளர் ஷாலினி நன்றி கூறினார்.