ADDED : ஜன 16, 2025 10:46 PM

கூடலுார்; 'ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் சுற்றுலா பயணிகள், உணவு உண்பதற்கு பயன்படுத்திய 'பிளாஸ்டிக்' கழிவுகளை வீசி செல்வதை தடுக்க, கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான 'பிளாஸ்டிக் பொருட்கள்; தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் தற்காலிக ஊழியர்கள் நியமித்து, சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இருந்தால் பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், முழுமையாக தடுக்க முடியவில்லை.
வெளி மாநில சுற்றுலா பயணிகள், பலர் தங்களுக்கான உணவை சமைத்து எடுத்து வந்து, சாலை ஓரங்களில் அமர்ந்து, உண்டு செல்வதுடன், பயன்படுத்திய 'பிளாஸ்டிக்' கழிவுகளை சாலையோரம் வீசி செல்கின்றனர்.
கூடலுார்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் இது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது. இவர்கள், வீசி செல்லும் பிளாஸ்டிக்க கழிவுகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது.
சில பகுதிகளில் தனியார் மூலம் சாலையோரம் தடுப்புகளை ஒட்டி கம்பி வேலி அமைத்துள்ளனர். அப்பகுதியிலும், சுற்றுலா பயணிகள் அமர்ந்து உணவு உட்கொண்ட பின் வேலி தாண்டி கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனைத் தடுக்க, இச்சாலையில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'நீலகிரியின் வனச்சுற்றுச்சூழல், மண் வள பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்திருப்பது வரவேற்க கூடியது.
இத்தடையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை மேலும் தீவிர படுத்த வேண்டும்,' என்றனர்.