/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர வனத்தில் குவிந்து வரும்... 'பிளாஸ்டிக்' கழிவுகள்!
/
சாலையோர வனத்தில் குவிந்து வரும்... 'பிளாஸ்டிக்' கழிவுகள்!
சாலையோர வனத்தில் குவிந்து வரும்... 'பிளாஸ்டிக்' கழிவுகள்!
சாலையோர வனத்தில் குவிந்து வரும்... 'பிளாஸ்டிக்' கழிவுகள்!
ADDED : பிப் 17, 2024 12:32 AM

கூடலுார்:கூடலுார்- கோழிக்கோடு செல்லும் குடோன் பகுதி சாலையோரம், சுற்றுலா பயணிகளால் வனப்பகுதி களில் குவியும்,'பிளாஸ்டிக்' கழிவுகளால் வனச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முதற்கட்டமாக, 21 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஐகோர்ட் உத்தரவின் படி, பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து வருவாய் துறையினர் அவ்வப்போது கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை பறி முதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர்.
மேலும், கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், வாகன சோதனை மேற்கொண்டு, சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்களை பறிமுதல் செய்யும் பணியில் பல ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், சில இடங்களில், அரசின் விதிகளின் கீழ் 'பேக்கிங்' செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கவர்களையும் பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
பயணிகளால் பாதிப்பு
இந்நிலையில், நீலகிரிக்கு வரும் வெளி மாநில சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்து வருவதையும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்களை, வனத்தை ஒட்டிய சாலையோரங்களில் வீசி செல்வதையும் நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
பயணிகள், தாங்கள் எடுத்து வரும் உணவை, சாலையோரம் உள்ள சிமென்ட் தடுப்பு சுவர்களில் அமர்ந்து உட்கொண்ட பின், மீதமாகும் உணவு மற்றும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், தண்ணீர் பாட்டில்களை சாலையோர வனங்களில் வீசி செல்வது தொடர்கிறது.
அதில், நாடுகாணி வழியாக பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் தாங்கள் பயன்படுத்திய, பிளாஸ்டிக் கழிவுகளை, குடோன் அருகே சாலையோர வனப்பகுதியில் வீசி செல்வது அதிகரித்துள்ளது.
இதனால், வனச் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், உணவு கழிவுகளுடன் காணப்படும் பிளாஸ்டிக் கவர்களை யானை உட்பட பிற விலங்கினங்கள் உட்கொள்ளும் அபாயம் தொடர்கிறது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'மாநில எல்லையில், கூடுதல் ஊழியர்களை நியமித்து, வாகன சோதனையில் கூடுதல் கவனம் செலுத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையெனில், சுற்றுலா பயணிகளால் சாலையோர வனத்தில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகளை தடுக்க முடியாது,' என்றனர்.
மாவட்ட கலெக்டர் அருணா கூறுகையில்,'' நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி, 'பிளாஸ்டிக்' ஒழிப்பு என்பது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்த கூடாது. பிளாஸ்டிக் சோதனையில் கொஞ்சம் இடைவெளி விட்டதாலும், அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.
நீலகிரி சுற்றுலா மாவட்டமாக உள்ளதால், சாலையோர வனப்பகுதிகள்; உட்பட பிற இடங்களில் பலரும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசி செல்வதால், அதன் சோதனை என்பது தொடர்ச்சியாக நடந்தால் மட்டுமே தடுக்க முடியும்.
மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் 'பிளாஸ்டிக்' சோதனை பணி நடந்து வருகிறது. அதேபோல, வாரம் தோறும் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் குறித்த சோதனையும் நடந்து வருகிறது,'' என்றார்.