‘பிளாஸ்டிக்’ உட்கொள்ளும் காட்டெருமை தொட்டிகள் அகற்றிய இடத்தில் வீசப்படும் குப்பையால் பாதிப்பு
‘பிளாஸ்டிக்’ உட்கொள்ளும் காட்டெருமை தொட்டிகள் அகற்றிய இடத்தில் வீசப்படும் குப்பையால் பாதிப்பு
ADDED : ஆக 25, 2026 02:00 PM

குன்னுார்: கேத்தி பேரூராட்சி பகுதியில் குப்பை தொட்டிகள் அகற்றிய இடங்களில், வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குன்னுார், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த குப்பை தொட்டிகளை நிர்வாகம் அகற்றியது. எனினும் இப்பகுதி மக்கள், ‘பிளாஸ்டிக்’ பைகளில், உணவு கழிவுகள் உட்பட குப்பைகளை கொட்டுகின்றனர். இவற்றை காட்டெருமைகள் மற்றும் கால்நடைகள் உட்கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வன உயிரின ஆர்வலர் ஹரிஹரன் கூறுகையில்,‘‘வன பகுதியிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வரும் வனவிலங்குகள், குப்பை கழிவுகளில் இருக்கும் உணவை தேடும்போது, அங்கள்ள பிளாஸ்டிக் பைகளையும் சேர்த்து உண்ணுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால் செரிமான மண்டலம் பாதித்து அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது, நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடைகள் உள்ள போதிலும், முறையான குப்பை மேலாண்மை இல்லாததால் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. எனவே, கேத்தி பேரூராட்சி நிர்வாகம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் தரம் பிரித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
