தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குன்னுார் சதுப்புநில குடிநீரில் அதிகரித்துள்ள... நச்சு கழிவு!:குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் 'பகீர்'

குன்னுார் சதுப்புநில குடிநீரில் அதிகரித்துள்ள... நச்சு கழிவு!:குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் 'பகீர்'

குன்னுார் சதுப்புநில குடிநீரில் அதிகரித்துள்ள... நச்சு கழிவு!:குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் 'பகீர்'


UPDATED : செப் 04, 2026 04:13 AM

ADDED : செப் 03, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:13 AM ADDED : செப் 03, 2026 04:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: 'குன்னுார் பெரிய வண்டிச்சோலை மற்றும் 'ஸ்பிரிங்பீல்ட்' பகுதி மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் உப்புதொட்டி ஊற்றுநீர், மனிதர்கள் குடிப்பதற்கு சற்றும் தகுதியற்றது,' என, குடிநீர் வடிகால் வாரிய ஆய்வறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார், பெரியவண்டிச்சோலை பகுதியில் உள்ள இயற்கை சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானங்கள், டாஸ்மாக் குடோன் மற்றும் பிற கழிவுநீர் ஆகியவை நேரடியாக உப்புத்தொட்டி குடிநீர் ஊற்றில் கலந்து வருவதாக பொதுமக்கள் தரப்பில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஊட்டியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மாவட்ட குடிநீர் பரிசோதனை ஆய்வகத்திற்கு உப்புதொட்டி நீர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, 'குடிநீர் தர அளவு விதிகளுக்கு, இந்த நீர் உட்படவில்லை; இது மனித பயன்பாட்டிற்கு தகுதியற்றது,' என்பதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, குடிநீரில் அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பான லிட்டருக்கு, 0.5 மி.கி., என இருப்பதற்கு பதில், அதிகமாக, 2.22 மி.கி., அமோனியா கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவான, 1.0 மி.கி., விட , 5.6 மி.கி., இரும்புச்சத்து மிகவும் அதிகம் கலந்துள்ளதுடன், நீரின் நிறமும் பழுப்பு நிறமாக மாறியுள்ளது ஆய்வில் சுட்டி காட்டப்பட்டுள்ளது. கழிவுநீரும், நச்சு பொருட்களும் அதிகளவில் கலந்திருப்பதை அமோனியா மற்றும் இரும்புசத்தின் அபாயகரமான உயர்வு வெளிப்படுத்துகிறது. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தன்னார்வலர் ஜெயக்குமார் கூறுகையில்,''மனித கழிவுகளும், நச்சுக்கழிவுகளும் கலந்து வினியோகிக்கப்படும் இந்த அசுத்தமான குடிநீரால் பொதுமக்களுக்கு கொடிய தொற்றுநோய்கள் பரவும் அபாயம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. நீராதாரத்தை பாழ்படுத்தும் கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக துண்டித்து, சதுப்பு நில ஆக்கிரமிப்பு கட்டுமானங்களை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

மக்கள் கூறுகையில், 'நகராட்சி அதிகாரிகள் இந்த நீரை இதுவரை ஆய்வு செய்யாமல் வழங்கியது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் உரிமையை மீட்கவும், எதிர்கால சந்ததியினரின் நலனை காக்கவும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us