பெற்றோர் கல்லறையில் விஷம் அருந்தி காவலர் தற்கொலை
பெற்றோர் கல்லறையில் விஷம் அருந்தி காவலர் தற்கொலை
ADDED : ஏப் 16, 2026 05:55 PM

ஊட்டி: ஊட்டி அருகே பெற்றோர் கல்லறைக்கு சென்ற போலீஸ் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டியை சேர்ந்த ரிச்சர்ட்சன், 31, என்பவர், ஊட்டி சிறையில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். ரிச்சர்ட்சனுக்கு திருமணமாகி, ஒரு குழந்தை உள்ளது.
மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், ரிச்சர்ட்சன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். உறவினர்கள் இருவரும் சேர்ந்து வாழ முயற்சி செய்தும் ஒன்று சேர்க்க முடியவில்லை.
இதனால், மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்த ரிச்சர்ட்சன், கடந்த இரண்டு மதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஊட்டி காந்தள் பகுதியில், இவரது பெற்றோரை அடக்கம் செய்த கல்லறைக்கு சென்று விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் அனுராதா, எஸ்.ஐ., ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
