போதிய பருவமழை பெய்யாததால் மின் உற்பத்தியில் சிக்கல்! மலையை நம்பியுள்ள சமவெளி சாகுபடியிலும் பாதிப்பு
போதிய பருவமழை பெய்யாததால் மின் உற்பத்தியில் சிக்கல்! மலையை நம்பியுள்ள சமவெளி சாகுபடியிலும் பாதிப்பு
ADDED : நவ 12, 2026 06:39 PM

ஊட்டி:
நீலகிரியில் ஆண்டு சராசரி மழை அளவான, 183 செ.மீ ., அளவில், 71 செ.மீ. , மழை அளவு மட்டுமே எட்டியதால், மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்கார நீர்மின் திட்டத்தின் கீழ், 13 அணைகள் , 30க்கு மேற்பட்ட தடுப்பணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
அதில், நீலகிரியில், 70 மெகாவாட் போக, 80 சதவீதம் மின்சாரம் கோவை, ஈரோடு உட்பட வெளி மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. தவிர, கோவை மாவட்டத்துக்கான, பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம்; நீலகிரியில் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம்; கிராம ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டிடியூட், ராணுவ மையம் ஆகியவற்றுக்கு, இங்குள்ள அணையின் குடிநீர் முக்கிய பங்களிப்பதாக உள்ளது. இந்நிலையில், மாவட்டத்தில், 12 மின்நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டு, 200 மெகாவாட் வரை மட்டுமே உற்பத்தி நடக்கிறது. இதனால், சமவெளி பகுதிகளுக்கான மின் தேவையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும், அடுத்த ஆண்டு வரும் கோடை காலத்திலும் இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பருவகால மழை அளவு விபரம்:
நீலகிரியில், குளிர்கால பருவ மழை, ‘ஜன., மற்றும் பிப்., மாதம் என, 8 செ.மீ; கோடை காலம் மார்ச் முதல்- மே மாதம், 20 செ.மீ; தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் செப்., மாதம், 80 செ.மீ; வடகிழக்கு பருவ மழை அக்., முதல் டிச., மாதம், 75 செ.மீ,’ என, 183 செ.மீ., ஆண்டின் சராசரி மழையளவாகும்.
இந்நிலையில், நடப்பாண்டில், குளிர் காலம், 1 செ.மீ; கோடை மழை, 5 செ.மீ;தென்மேற்கு, 30 செ.மீ; வடகிழக்கு பருவ மழை இதுவரை, 35 செ.மீ., பெய்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டு மொத்தம், 71 செ.மீ., மழை மட்டுமே இதுவரை பதிவாகியுள்ளது.
நடப்பாண்டில் இதுவரை சராசரி மழை அளவு எட்டாததால் அணைகள், குடிநீர் ஆதார பகுதிகளில் தண்ணீர் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை ஓரளவு சமாளிக்க முடியும் என்றாலும், அடுத்தாண்டு கோடை காலத்தில் கடும் வறட்சியில் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ‘‘எல் –நினோ தாக்கம் நிலைப்பாடால், வரும் நாட்களில், மழை பொழிவு வழக்கத்தை விட அதிகரிக்கலாம் அல்லது வறட்சியான காலநிலை நிலவுவதற்கு வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் பனி பொழிவு ஏற்படுவதற்கு முன்பாக, வடகிழக்கு பருவமழை இன்றும், 50 செ.மீ., அளவை எட்டினால் கோடை காலத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகமும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது,’’ என்றனர்.
