/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுவாமி விவேகானந்தரின் சீடர் குட்வின் நினைவிடத்தில் பிரார்த்தனை
/
சுவாமி விவேகானந்தரின் சீடர் குட்வின் நினைவிடத்தில் பிரார்த்தனை
சுவாமி விவேகானந்தரின் சீடர் குட்வின் நினைவிடத்தில் பிரார்த்தனை
சுவாமி விவேகானந்தரின் சீடர் குட்வின் நினைவிடத்தில் பிரார்த்தனை
ADDED : ஜன 14, 2025 01:38 AM

ஊட்டி:
ஊட்டி புனித தாமஸ் தேவாலயத்தில், சுவாமி விவேகானந்தரின் சுருக்கெழுத்தாளர் குட்வின் நினைவிடத்தில் அமைதி பிரார்த்தனை நடந்தது.
சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக வாழ்வில், உண்மையான சீடராக விளங்கியவர் சுருக்கெழுத்தாளர் குட்வின். இவர், 1898ம் ஆண்டில் தனது, 28 வயதில் ஊட்டியில் உயிர் நீத்தார். விவேகானந்தரின் சொற்பொழிவுகள் ஆன்மிக புத்தக வடிவில் நிலைத்து இருக்க, இவரது தன்னலமற்ற சேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
அந்த மகத்தான பணியின் வெளிப்பாடாக, சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், விவேகானந்தா நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள், ராமகிருஷ்ணா மடத்தின் பக்தர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சத்யயுக்தனந்தா பேசுகையில், ''சுவாமி விவேகானந்தரின் எழுத்தில், ஒரு வார்த்தை கூட அர்த்தம் மாறாமல் எண்ணங்களை பதிவு செய்தவர் குட்வின். பக்தியும் மன வலிமையும் கொண்ட சீடராக வாழ்ந்தவர்,'' என்றார்.
பிரார்த்தனையை தலைமை ஏற்று நடத்திய ஆயர் ஜெர்ரி ராஜ்குமார் பேசுகையில், ''உலக அமைதிக்கு ஆன்மிக பணிகள் மேற்கொண்டவர்களை நினைவுபடுத்தும் இந்த தருணத்தில், எல்லா மக்களுக்கும் அமைதியும், மகிழ்வான வாழ்க்கையும் நிலைத்திருக்க பிரார்த்தனை செய்கிறோம்,'' என்றார்.
ஆயர் கிறிஸ்தோபர் பேசுகையில், ''தன்னலமற்ற சேவைகள் செய்தவர்களே நாம் வாழும் இந்த உலகில் வழிகாட்டியாக உள்ளனர்,'' என்றார்.
'மானஸ்' ஆன்மிக அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ்,''சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை குறிப்புகள் குறித்து, குட்வின் ஆற்றிய எழுத்து பணிகளால் தான் அவரின் பல்வேறு சாதனை உலகிற்கு தெரிய வந்தது,'' என்றார். இதற்கான ஏற்பாடுகளை ராமகிருஷ்ண மட தலைமை நிர்வாகி ராகவேசனந்தா செய்திருந்தார்.