/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறைச்சாலை அருங்காட்சியகமாக தொடர வேண்டும்: சொகுசு சுற்றுலாத்தலமாக மாற்ற ஆட்சேபம்
/
சிறைச்சாலை அருங்காட்சியகமாக தொடர வேண்டும்: சொகுசு சுற்றுலாத்தலமாக மாற்ற ஆட்சேபம்
சிறைச்சாலை அருங்காட்சியகமாக தொடர வேண்டும்: சொகுசு சுற்றுலாத்தலமாக மாற்ற ஆட்சேபம்
சிறைச்சாலை அருங்காட்சியகமாக தொடர வேண்டும்: சொகுசு சுற்றுலாத்தலமாக மாற்ற ஆட்சேபம்
ADDED : செப் 29, 2025 09:53 PM

கூடலுார்:
'கூடலுார் அருகே, நடுவட்டத்தில் உள்ள, 160 ஆண்டுகள் பழமையான, ஆங்கிலேயர் காலத்து சிறைச்சாலை பழமை மாறாமல் அருங்காட்சியகமாக தொடர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில், 1860ல் மலேரியா நோய் தாக்கி பலர் உயிரிழந்தனர். அப்போது, 'சின்கோனா' மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்து, மலேரியாவை குணப்படுத்துவதை ஆங்கிலேயர் அறிந்தனர். சின்கோனா மரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள, நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில், வளர்க்க முடிவு செய்தனர்.
இப்பணிகளில், சிறை கைதிகளை பயன்படுத்த முடிவு செய்த ஆங்கிலேயர், அவர்கள் தங்குவதற்காக நடுவட்டத்தில், துாக்கு மேடை, கோர்ட்டுடன் கூடிய சிறைச்சாலை அமைத்தனர். தொடர்ந்து, பிரிட்டன்- சீனா போரில் பிரிட்டனிடம் சரணடைந்த, 560 கைதிகளை. 1865ல் அழைத்து வந்து சிறையில் அடைத்து, இப்பணியில் ஈடுபடுத்தினர். சிறைச்சாலை, 1869 வரை செயல்பட்டது. பின் கைதிகள் பலர் சொந்த ஊருக்கு சென்று விட, பலர் அங்கேயே தங்கிவிட்டனர்.
அருங்காட்சியகமாக மாறிய சிறை தற்போது, இப்பகுதி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துடன் இணைக்கப்பட்டு, தேயிலை தோட்டமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சிறை சாலையை அருங்காட்சியகமாக மாற்றுவதற்காக, சுற்றுலாத்துறையிடம் ஒப்படைப்பட்டது.
2009--10ல் எச்.எ.டி.பி., நிதி, 6 லட்சம் ரூபாயில் சிறைச்சாலை புனரமைக்கப்பட்டது. அங்கு கோர்ட்டில், நீதிபதி கைதியிடம் விசாரிப்பது; பாதுகாப்பு பணியில் ஆங்கிலேய போலீசார்; சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளின் பொம்மைகள் அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டு உள்ளன.
மேலும், மருந்து தயாரிக்க பயன்படுத்திய, இயந்திரங்கள், கண்ணாடி குடுவைகள், புரொஜெக்டர் உள்ளிட்ட பல பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இப்பகுதியை தனியார் சார்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக மாற்ற, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி கோரி, தமிழ்நாடு வனத்துறை சார்பில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'இப்பகுதியை தனியார் சார்பில், சுற்றுலா தளமாக மாற்றுவதை தவிர்த்து, இதன் தனித்துவம் மாறாத வகையில் வனத்துறை பராமரித்து, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்,' என,வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட ஆவண மையத்தின் கவுரவ இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கம் கூறுகையில், ''நடுவட்டத்தில் உள்ள சிறைச்சாலை பாதுகாக்க வேண்டிய ஒரு வரலாற்று பொக்கிஷமாகும். இப்பகுதியின் வரலாற்று சூழல் மாறாமல் அருங்காட்சியகமாக மாற்றி, சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஆராய்ச்சியாளர், வரலாற்று மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது, இதனை சொகுசு சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து தனியார் சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது, இதற்கு அரசு அனுமதி அளித்தால், பல மாற்றங்கள் செய்யப்பட்டு, வரலாற்று தனித்துவம் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, அரசே நிர்வகித்து, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக மாநில அரசுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.