/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அனுமதியின்றி இயங்கிய தனியார் ஆம்னி பஸ் பறிமுதல்
/
அனுமதியின்றி இயங்கிய தனியார் ஆம்னி பஸ் பறிமுதல்
ADDED : ஆக 04, 2025 07:57 PM

ஊட்டி; கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி முதல் கோவை வரை, அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் ஆம்னி பஸ்சை, ஊட்டியில் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி, தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ளது. இங்கிருந்து நாள் தோறும் பல்வேறு தேவைகளுக்கான தமிழகத்திற்கு ஏராளமான மக்கள் வருகின்றனர். மேலும், கூடலுார், ஊட்டி மற்றும் கோவை போன்ற பகுதிகளுக்கும் நாள் தோறும் பலர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், சுல்தான் பத்தேரி கோட்டமலை பகுதியை சேர்ந்த ஒரு தனியார் 'டிராவல்ஸ்' நிறுவனம், நேற்று முதல் சுல்தான் பத்தேரியில் இருந்து, பந்தலுார், கூடலுார், ஊட்டி வழியாக கோவைக்கு ஒரு பஸ்சை இயக்கியுள்ளது.
அந்த நிறுவனம் 'ஆன்லைன்' புக்கிங் எடுத்து கொண்டு, 4 பயணிகளை கோவைக்கு ஏற்றி சென்றுள்ளது. பஸ் அனுமதியின்றி இயக்கப்படுவதை அறிந்தவுடன், போக்குவரத்து கழக அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து, சுல்தான் பத்தேரியில் இருந்து, ஊட்டிக்கு வந்த அந்த தனியார் பஸ்சை போக்குவரத்து ஆய்வாளர் குணசேகர் பிடித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, அந்த வாகனம் அனுமதியின்றி இயக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும், அந்த பஸ், சுற்றுலா பயணிகளை மட்டுமே ஏற்றி செல்லும் 'ஆல் இண்டியா பெர்மிட்' வைத்துள்ள பஸ் என தெரிய வந்ததால், அதனை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
போக்குவரத்து ஆய்வாளர் குணசேகரன் கூறுகையில், ''இரு மாநிலங்களுக்கு இடையே பயணிகளை ஏற்றி செல்ல முறையான அனுமதி, பெர்மிட் பெற வேண்டும். ஆனால், தனியார் பஸ் நிறுவனம் எந்த ஒரு அனுமதியும், பெர்மிட் பெறவில்லை.
எனவே, அனுமதியின்றி இயக்கப்பட்ட பஸ் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அபராதமும் விதிக்கப்படும்,'' என்றார்.