/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாசனை திரவிய பயிர்களை உற்பத்தி செய்தால் லாபம் ஈட்ட முடியும்! நஷ்டத்தில் இருந்து அரசு தோட்ட நிறுவனம் மீட்கப்படுமா?
/
வாசனை திரவிய பயிர்களை உற்பத்தி செய்தால் லாபம் ஈட்ட முடியும்! நஷ்டத்தில் இருந்து அரசு தோட்ட நிறுவனம் மீட்கப்படுமா?
வாசனை திரவிய பயிர்களை உற்பத்தி செய்தால் லாபம் ஈட்ட முடியும்! நஷ்டத்தில் இருந்து அரசு தோட்ட நிறுவனம் மீட்கப்படுமா?
வாசனை திரவிய பயிர்களை உற்பத்தி செய்தால் லாபம் ஈட்ட முடியும்! நஷ்டத்தில் இருந்து அரசு தோட்ட நிறுவனம் மீட்கப்படுமா?
ADDED : மார் 04, 2025 11:17 PM

கூடலுார் : 'கூடலுார் டான்டீ தேயிலை தோட்டத்தை, நஷ்டத்தி லிருந்து மீட்டெடுக்க, வாசனை பயிர்களை பயிரிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுக்காக, மாநில அரசு, நீலகிரி மாவட்டத்தில், 1968ல் வனத்துறை மூலம் துவக்கப்பட்ட அரசு தேயிலை தோட்டம், 1976 தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) நிறுவனமாக மாற்றியது.
இதன் கீழ், குன்னுார், கோத்தகிரி, கூடலுார், கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில், 10 ஆயிரம் ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக, 8,000 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
வனத்துறையிடம் ஒப்படைப்பு
லாபத்தில் இயங்கி வந்த, டான் டீ, பல்வேறு காரணமாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையை காரணம் காட்டி, கூடலுார் பாண்டியார் உள்ளிட்ட டான்டீ தேயிலை தோட்டங்களில் வனத்தை ஒட்டிய பராமரிப்பு இல்லாத, 650 ஏக்கர் நிலம், 2019ல் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து பராமரிப்பு இல்லாத, 5,000 ஏக்கர் தேயிலை தோட்டம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
மீதமுள்ள தேயிலை தோட்டம், 'டான்டீ' வசம் உள்ளது. இங்கு, பல ஆண்டுகள் பணியாற்றி வந்த தற்காலிக தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். இதனால், தற்போது, 3,000 தொழிலாளர்கள் மட்டும் பணியாற்றி வருகின்றனர்.
நஷ்டத்தால் மூடப்படும் சூழல்
தொடரும் நஷ்டம், தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற பின், இங்கு பணிபுரிய தொழிலாளர்கள் இன்றி 'டான்டீ' மூடப்படும் சூழல் உள்ளது.
இதனை தடுக்க, வாசனை திரவிய பயிர்களையும் அதிகளவில் பயிரிட்டு, உற்பத்தி செய்வதன் மூலம், டான்டீ லாபத்தில் இயங்க வாய்ப்புள்ளது. பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதற்கான நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'டான்டீயில், வாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டாலும், குறைந்த சம்பளம்; எதிர்காலத்தில் மூடப்படும் சூழல் ஆகிய காரணங்களால், இங்கு வேலையில் சேர்வதில் யாரும் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, பசுந்தேயிலை உற்பத்தியை மட்டும் சார்ந்திருக்காமல், குறுமிளகு செடிகளை அதிகம் பயிரிடுவதுடன், கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை திரவியங்களை பயிரிட்டு, கூடுதல் வருவாய் பெற முடியும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், டான்டீயை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க முடியும்,' என்றனர்.