'சுற்றுசூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கூட்டு பொறுப்பாகும்'
'சுற்றுசூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கூட்டு பொறுப்பாகும்'
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:36 PM

குன்னூர்: குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம் சார்பில், வெலிங்டன் ஏரி பூங்காவில் தூய்மையே சேவை மற்றும் ஸ்வச் பாரத் திவாஸ் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கன்டோன்மென்ட் வாரிய தலைவர் மற்றும் எம்.ஆர்.சி., பிரிகேடியர் கிருஷ்ண னேந்து தாஸ் பேசியதாவது,
ராணுவ முகாமில், தினசரி, 4.5 டன் அளவிற்கு குப்பைகள் சேர்கிறது. இந்த கழிவுகளை கையாள்வதும், ஈரகழிவுகளை இயற்கை உரமாக மாற்றி மறுசுழற்சி செய்வதும் மிகப்பெரிய சவாலான பணியாகும். சுற்றுசூழலை தூய்மையாக பாதுகாப்பது தூய்மை பணியாளர்களின் பணி மட்டுமல்ல; பொதுமக்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரின் கூட்டு பொறுப்பாகும். மக்கள் தங்கள் வீடுகளிலேயே குப்பைகளை நூறு சதவீதம் தரம் பிரித்து கொடுத்து ஒத்துழைக்க வேண்டும். விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்து பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு படையெடுத்து வந்தாலும், அடுத்த நாளே அந்த பகுதிகளை புத்துணர்ச்சியுடன் தூய்மையாக்கும் நமது பணியாளர்களின் அயராத உழைப்பை பாராட்டுகிறேன்.'' என்றார்.
நடப்பு ஆண்டிற்கான பள்ளிகளுக்கு இடையேயான தூய்மை
விழிப்புணர்வு போட்டிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமைச் செயல் அலுவலர் டிக்கினி கிந்தியா, வாரிய உறுப்பினர் ஷீபா முன்னிலை வகித்தனர்.
விழாவில் துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
வாரிய சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பழனிச்சாமி, பூரணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
