/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு ; பெற்றோர் கவனம் செலுத்த அறிவுரை
/
பெண் குழந்தைகள் பாதுகாப்பு ; பெற்றோர் கவனம் செலுத்த அறிவுரை
பெண் குழந்தைகள் பாதுகாப்பு ; பெற்றோர் கவனம் செலுத்த அறிவுரை
பெண் குழந்தைகள் பாதுகாப்பு ; பெற்றோர் கவனம் செலுத்த அறிவுரை
ADDED : நவ 28, 2024 11:48 PM

பந்தலுார்; பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க, பெற்றோர் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.
பந்தலுார் அருகே நெலக்கோட்டை ஊராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படும் வகையில், 'புதிய வானவில் மையம்' எனும் பெயரில், பாலின வள மைய அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் டெர்மிளா தலைமை வகித்தார்.
மகளிர் உதவி திட்ட அலுவலர் சாந்தசீலன் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில், குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பெற்றோர் தங்கள் வீடுகளில் குழந்தைகள் முன்பாக சண்டையிட்டுக் கொள்வது அல்லது போதையில் இருப்பது போன்றவற்றை கைவிட வேண்டும்.
தங்கள் குழந்தைகள் மீதான அக்கறையை பெற்றோர் முழுமையாக காட்டினால் மட்டுமே, குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக அமையும்.
பெண் மற்றும் ஆண் குழந்தைகளிடம், பெற்றோர் சமுதாயத்தில் ஏற்படும் குற்ற செயல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இந்த மையத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் தீர்வு காண்பது, போதை பழக்கங்களை கட்டுப்படுத்துவது, கல்வி மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது.