/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தர்ணா போராட்டம்
/
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தர்ணா போராட்டம்
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தர்ணா போராட்டம்
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தர்ணா போராட்டம்
ADDED : ஏப் 29, 2025 09:06 PM
கோத்தகிரி; கோத்தகிரி தேனாடு புது காலனி கிராமத்திற்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், பகுதி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி தேனாடு ஊராட்சிக்கு உட்பட்ட, புது காலனி கிராமத்தில், 160 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர். கிராமத்திற்கு, போதிய தண்ணீர் வசதி இல்லாததால் மக்கள், 2. கி.மீ., துாரம் நடந்து சென்று, வனப்பகுதியில் உள்ள நீர் ஆதாரத்தில் இருந்து, தண்ணீர் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது.
கிராமத்தில், 2022--23ம் ஆண்டில், 36.69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேல்நிலை குடிநீர் தொட்டியுடன், 160 வீடுகள் உள்ள நிலையில், 90 வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாகியும் தண்ணீர் வினியோகம் இல்லாமல் உள்ளது. இதனை கண்டித்து, கவுன்சிலர் வில்சன் தலைமையில், 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று காலை, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு, 'ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, மக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும். அதுவரை, தற்காலிகமாக, பழைய கிணற்றில் இருந்து, மோட்டார் பம்பு உதவியுடன், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

