ADDED : பிப் 22, 2024 06:17 AM

பந்தலுார்: கூடலுார் கல்வி மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில், முதல் மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் பெற்ற தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, 'ரெப்கோ' வங்கி சார்பில் நடந்தது.
வங்கி மேலாளர் அஜய் வரவேற்றார். வங்கி பேரவை இயக்குனர் வக்கீல் ரகு தலைமை வகித்து பேசியாவது:
தாயகம் திரும்பியோரின் வளர்ச்சிக்காக, ரெப்கோ வங்கி துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 2.5 லட்சம் பேர் தாயகம் திரும்பியோர் உள்ள நிலையில், 30 ஆயிரம் பேர் மட்டுமே, 'அ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.
தாயகம் திரும்பியோர் ஏதேனும் ஒரு ஆதாரத்தை கொடுத்தாலே, வங்கியில் 'அ' வகுப்பு உறுப்பினராக சேர முடியும். இதன் மூலம் கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்புகள், சுய வேலை வாய்ப்புகள் மற்றும் அதற்கான உதவி, மருத்துவ உதவி, மரணமடைந்தால் உதவி என பல உதவிகள் கிடைக்கும். குறிப்பாக, 'அ' வகுப்பு உறுப்பினர்களின் குழந்தைகள், கல்வியில் சிறந்து விளங்கினால் உயர்கல்விக்கு உதவ வங்கி தயாராக உள்ளது.
எனவே, மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி சமுதாயத்தை உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஸ்ரீநிதியின் பெற்றோர் கவுரவிக்கப்பட்டு, பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கூடுதல் மதிப்பெண் பெற்ற, 84 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் வக்கீல் கணேசன், கிருஷ்ண பாரதியார், லோகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். உதவி மேலாளர் பிரபு நன்றி கூறினார்.