/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி தற்காலிக நிறுத்தம் வயிற்றில் குட்டியுடன் வரையாடு இறப்பு எதிரொலி
/
வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி தற்காலிக நிறுத்தம் வயிற்றில் குட்டியுடன் வரையாடு இறப்பு எதிரொலி
வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி தற்காலிக நிறுத்தம் வயிற்றில் குட்டியுடன் வரையாடு இறப்பு எதிரொலி
வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தும் பணி தற்காலிக நிறுத்தம் வயிற்றில் குட்டியுடன் வரையாடு இறப்பு எதிரொலி
ADDED : டிச 11, 2024 08:15 AM

கூடலுார் : முக்கூர்த்தி தேசிய பூங்காவில், மயக்க மருந்து செலுத்தி, 'ரேடியோ காலர்' பொருத்தப்பட்ட நிலையில், வயிற்றில் குட்டியுடன் நீலகிரி வரையாடு திடீரென இறந்ததை தொடர்ந்து, அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நம் மாநில விலங்கான வரையாடுகள், நீலகிரி மாவட்டம் முதுமலை முக்கூர்த்தி தேசிய பூங்கா உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இவைகளை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும், மாநில அரசு நீலகிரி வரையாடு திட்டத்தை, 2022ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரையாடுகளுக்கு 'ரேடியோ காலர்' பொருத்தி கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.
வயிற்றில் குட்டியுடன் வரையாடு பலி
இந்நிலையில், கடந்த, 6ம் தேதி முதுமலை புலிகள் காப்பகம் முக்கூர்த்தி தேசிய பூங்காவில், கால்நடை டாக்டர்கள் இரண்டு வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். முதலில்,மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தப்பட்டு வரையாடு வனத்தில் விடுவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பெண் வரையாடுக்கு மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் பொருத்தும் பணி நடந்தது. வரையாடு மயக்க நிலையில் இருந்து வெளி வருவதற்காக அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மயக்கம் தெளியாமல் உயிரிழந்தது. அதன் வயிற்றில் மூன்று மாத குட்டியும் இருந்தது.
இந்த சம்பவத்தால், வன உயிரின ஆர்வலர்கள்; வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 'மாநில விலங்குக்கு' ஏற்பட்டு வரும் பாதிப்பு குறித்து, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. முதல்வர் தனிப்பிரிவு வரை புகார்கள் சென்றது.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'நீலகிரி வரையாடுகள் மிகவும் சாதுவான, மனிதர்களை கண்டால் ஓடி ஒளியும் சுபாவம் கொண்டவை. அவற்றை பிடித்து, கழுத்தில் ரேடியோ காலர் பொருத்துவதால், மன ரீதியாக பாதிக்கப்படும்.
மேலும், அதன் எடை வரையாடுகளை உடல் ரீதியாக மிகவும் பாதிக்கும். அவற்றுக்கு இடையூறு செய்யாமல், பாதுகாப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,' என்றனர்.
இந்நிலையில், வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.
வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் கூறுகையில், ''வரையாடுகளுக்கு ரேடியோ காலர் பொருத்தும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவுக்கு பின் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,'' என்றார்.